பகுத்தறிவு கருத்துகள் நிறைந்த திரைப்படங்களை எடுக்க வேண்டும்; இயக்குனர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

0
82

பகுத்தறிவு கருத்துகள் நிறைந்த திரைப்படங்களை எடுக்க வேண்டும்; இயக்குனர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மற்றும் மைனாரிட்டி ஆகிய துறைகளின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான கே.ராஜூ தொகுத்து எழுதிய, “தி தலித் டுரூத்” புத்தகம் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, அதை அவரிடம் இருந்து புத்தக ஆசிரியர் கே.ராஜூ பெற்றுக்கொண்டார். விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தி.மு.க.வை பொறுத்தவரை என்றைக்கும் பட்டியலின, பழங்குடியின மக்களுக்காக அரசியல் சட்டம் வழங்கியுள்ள வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறது. சமூக நீதிக்காக ஆட்சியில் இருக்கும்போது மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் பல தியாகங்களை செய்த இயக்கம் தி.மு.க.

“பெண் சிங்கம்” படத்துக்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த சம்பளம் ரூ.50 லட்சம், தனது பணம் ரூ.11 லட்சத்து 5 ஆயிரம் என மொத்தம் ரூ.61 லட்சத்து 5 ஆயிரத்தை பொறியியல் மாணவர் படிப்புக்காக வழங்கினார். அதன் மூலம் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது.

இதனால்தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன். அதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். அதற்கான எல்லா தகுதியும் எனக்கு உண்டு என்ற இறுமாப்புடன் இங்கு நிற்கிறேன்.

பேரறிஞர் அண்ணா, தலைவர் கருணாநிதி, இப்படி ஏராளமானவர் திரைத்துறையில் முற்போக்கு கருத்துகளை கையாண்டனர். அவர்கள் வழியில் நானும் ஈடுபட்டுள்ளேன். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், தலைவர் கருணாநிதி எழுதிய “ஒரே ரத்தம்” வார இதழில் வெளியானது. அந்த கதை படமாக்கப்பட்டபோது, அடிமைத்தனத்தை எதிர்க்கும் நந்தகுமார் என்ற கதாபாத்திரத்தில் நான் நடித்தேன்.

நேற்று முன்தினம் இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கி, உதயநிதி ஸ்டாலின் நடித்த “நெஞ்சுக்கு நீதி” திரைப்படத்தை நான் பார்த்தேன். அந்த படம் வரும் 20-ந் தேதி வெளிவருகிறது. பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமையை எதிர்த்து, அம்பேத்தர் வகுத்த அரசியல் அமைப்பு சட்டம் குறித்து இப்படம் பேசியிருக்கிறது.

பகுத்தறிவு கருத்துகள் நிறைந்த திரைப்படங்களை இயக்குனர்கள் எடுக்க வேண்டும். அதை நான் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன். அதுதான் சமூக நீதிக்கான தீர்வாக அமையும். அனைவரும் அரசியல் சட்டத்தை பின்பற்றி நடக்க வேண்டும்.

இன்று தமிழ்நாட்டில் நடப்பது எனது அரசல்ல, நமக்கான அரசு என்று சொல்லிவருகிறேன். அனைத்து மக்கள் வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் அரசு இந்த அரசு. 6-வது முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க. அரசு, பட்டியலின, பழங்குடியின மக்களை பாதுகாக்கும் அரசாக இருக்கிறது. சுருங்கச் சொன்னால் இதுதான் திராவிட மாடல் அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சட்டமன்ற தலைவர் எம்.சிந்தனைச்செல்வன், ம.தி.மு.க. தலைமை கழக செயலாளர் துரை வைகோ, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள்உள்பட பலர் கலந்துகொண்டனர்.