நீட் விலக்கு மசோதாவை உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

0
93

நீட் விலக்கு மசோதாவை உடனடியாக ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் சேதமடைந்துள்ளதால் விவசாயிகள் இழப்புகளை சந்தித்துள்ளனர்.

மழை பாதித்த இடங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாப்பான இடங்களை அழைத்துச் செல்லும் பணிகளில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்புகளில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கும், மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்குவதற்கும் அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்முடிவை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.