நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை; கர்நாடக பா.ஜ.க. அறிவிப்பு

0
171

நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை; கர்நாடக பா.ஜ.க. அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக சின்னத்திரை நடிகை அனிகா உள்பட 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்திருந்தனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தும் பழக்கம் இருப்பது பற்றி அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னட மற்றும் தமிழ் திரை உலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் ராகிணி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய சோதனையில், அவர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியதுடன், போதைப்பொருள் விற்கும் கும்பலை சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் மாலையில் நடிகை ராகிணி திவேதி அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

அவர் கடந்த காலங்களில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் என கூறப்படுகிறது. ஆனால், நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சியில் உறுப்பினராக இல்லை என கர்நாடக பா.ஜ.க. மறுப்பு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், நடிகை ராகிணி திவேதி எங்கள் கட்சி உறுப்பினர் இல்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நூற்றுக்கணக்கான பிரபலங்கள் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக சொந்த விருப்பத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்களில் ராகிணியும் ஒருவராக இருக்கலாம்.

தேர்தலில் பிரசாரம் செய்யும்படி அவருக்கு கட்சியில் இருந்து பொறுப்பு எதுவும் அளிக்கப்படவில்லை. அவர் சொந்த விருப்பத்தின்பேரில் பிரசாரத்தில் ஈடுபட்டு இருக்கலாம். அவரது சொந்த மற்றும் தொழில் முறை சார்ந்த வாழ்க்கை செயல்பாடுகள் பற்றி பா.ஜ.க. பொறுப்பேற்கவோ அல்லது பதிலளிக்கவோ முடியாது. இதில் இருந்து நாங்கள் விலகியே இருக்கிறோம் என அதில் தெரிவித்து உள்ளது.