நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது

0
51

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது

சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனாவால் பாதித்தவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளில் இந்த தேர்தல் நடைபெறுகிறது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள 1,374 வார்டுகளிலும், நகராட்சி பகுதியில் 3,843 வார்டுகளிலும், பேரூராட்சி பகுதியில் 7,621 வார்டுகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மாநகராட்சி பகுதிகளில் 15 ஆயிரத்து 158 வாக்குச்சாவடிகளி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நகராட்சி பகுதிகளில் 7,417 வாக்குச்சாவடிகளிலும், பேரூராட்சி பகுதிகளில் 8,454 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் சுமார் 2½ கோடி வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 1.13 லட்சம் போலீசார் ஈடு பட்டுள்ளனர். காவல் துறையினர், முன்னாள் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் காவல்துறையினர், சிறப்பு படை போலீசார், அதிவிரைவு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் 3,678 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் 1,100 இடங்கள் பதட்டமானவை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எனவே மக்கள் அச்சமின்றி வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்கலாம் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தெரிவித்துள்ளார். இன்று பதிவாகும் வாக்குகள் 22-ம் தேதி எண்ணப்படுகின்றன.