“‘தமிழ்நாடு’ – பெயரால் மட்டுமல்ல, ‘திராவிட மாடல்’ ஆட்சியாலும் பெருமை அடைகிறது” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
66

“‘தமிழ்நாடு’ – பெயரால் மட்டுமல்ல, ‘திராவிட மாடல்’ ஆட்சியாலும் பெருமை அடைகிறது” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட நாளுக்கான கொண்டாட்டத்தில், தான் வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அண்மையில் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார். இதையடுத்து பரிசோதனைக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தான் பூரண குணமடைந்து விட்டதாகவும், குடியரசுத் தலைவர் தேர்தல் நாளை நடைபெறுவதால், நேரில் சென்று வாக்களிக்கவுள்ளதாக அறிக்கை வாயிலாக தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திங்கட்கிழமையன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதே நாளில் (சூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது.

நம்முடைய மாநிலத்திற்குப் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் சூட்டி, அதற்கான தீர்மானத்தை முதலமைச்சராக அவர் சட்டமன்றத்தில் முன்மொழிந்து, ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்துக் கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து தீர்மானத்தை நிறைவேற்றிய நாள்தான் சூலை 18.

பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு, தமிழ்நாடு, தமிழ்நாடு என்று மூன்று முறை சொல்ல, அனைத்து உறுப்பினர்களும் ‘வாழ்க.. வாழ்க.. வாழ்க’ என்று முழங்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் உணர்வை இந்தியத் துணைக் கண்டத்திற்கு உணர்த்திய நாள்.

அந்த நாளினை, உங்களில் ஒருவனான எனது தலைமையிலான நமது அரசு, ‘தமிழ்நாடு நாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானித்திருப்பதால், சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு திருநாள்’ என்ற நிகழ்வு திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது.

சென்னை மாநிலத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன். தமிழ்நாடு என்ற பெயரால் மட்டுமல்ல, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்குப் பெருமைகளைச் சேர்த்து வருகிறோம். ” என்று குறிப்பிட்டுள்ளார்.