தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்

0
305

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார்

சென்னை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்ட அவர் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடினார். அதனைத்தொடர்ந்து தொகுதியில் மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டு வந்தார். தி.மு.க. அரசு பொறுப்பேற்று 1½ ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று பல அமைச்சர்களும், கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர்.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக கவர்னர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அங்குள்ள தர்பார் அரங்கத்தில் பதவி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

விழா மேடைக்கு எதிரே 2 பிரிவாக இருக்கைகள் போடப்பட்டு இருந்தன. ஒரு பிரிவில் அவரது குடும்பத்தினர், உறவினர்களும், மற்றொரு பிரிவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களும் அமர்ந்திருந்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் விழாவில் கலந்துகொண்டார். மூத்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளும் வந்திருந்தனர். முதல்-அமைச்சரின் மனைவியும், உதயநிதி ஸ்டாலினின் தாயாருமான துர்கா ஸ்டாலின் வந்தார். அவரை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், தங்கை செந்தாமரை, அவரது கணவர் சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, மகள் தன்மயா ஆகியோர் வந்தனர். எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கனிமொழி ஆகியோரும் வந்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து காலை 9.28 மணிக்கு தர்பார் அரங்கத்திற்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்தார். அவர்கள் மேடை ஏறியதும் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் மேடைக்கு வந்தனர்.

மேடையில் வைத்து உதயநிதி ஸ்டாலினை கவர்னருக்கு முதல்-அமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது கவர்னருக்கு உதயநிதி ஸ்டாலின் கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். பதவி ஏற்றார் அதைத்தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டது.

கவர்னர் படிக்க, உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் எடுத்துக்கொண்டார்.

‘கடவுள் அறிய’ என்ற வார்த்தையை தவிர்த்துவிட்டு ‘உளமாற’ என்ற வார்த்தையை பயன்படுத்தி அவர் பிரமாணம் எடுத்துக்கொண்டார். வாழ்த்து பின்னர் அதற்கான கோப்பில் 2 பேரும் கையெழுத்திட்டனர். அதன் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பதவி ஏற்பு விழா நிறைவடைந்தது. 8 நிமிடங்களில் பதவி ஏற்பு விழா முடிந்தது. மேடையில் கவர்னரும், முதல்-அமைச்சரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினர். உதயநிதி ஸ்டாலினை கவர்னர் கைகுலுக்கி வாழ்த்தினார். மேடையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலில் விழுந்து உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து பெற்றார்.

பின்னர் பாரம்பரிய முறைப்படி கவர்னருடன் அமைச்சர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

கூட்டணி கட்சியினர் பங்கேற்பு இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கோபண்ணா, இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. நாகைமாலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை, வறுமை ஒழிப்பு திட்டங்கள் மற்றும் ஊரக கடன்கள் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றதை தொடர்ந்து தமிழக அமைச்சரவையின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் 2-வது முறையாக அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சரானதை தி.மு.க. தொண்டர்கள் சென்னை உள்பட பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

கவர்னர் மாளிகை விழா முடிந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று பகல் 11.15 மணிக்கு சென்னை தலைமைச் செயலகம் வந்தார். அங்கு அவரை மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி மற்றும் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்ட அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறைக்கு சென்று அவரிடம் வாழ்த்து பெற்றார். இதன் பின்பு தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு வந்தபோது அமைச்சர் துரைமுருகன் உதயநிதி ஸ்டாலினின் இருக்கையில் அமர வைத்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் அமைச்சர்கள், தயாநிதி மாறன் எம்.பி உள்ளிட்டோர் பொன்னாடை, மலர் மாலை அணிவித்தும் பூங்கொத்து, புத்தகம் கொடுத்தும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் பின்பு தமிழ்நாட்டு பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்குவிக்கும் வகையிலும், விளையாட்டு வீரர்களின் நலனுக்காகவும் 3 முக்கிய கோப்புகளில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

இதில் முதல் கையெழுத்து முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை ரூ.47 கோடி செலவில் நடத்தும் கோப்பு ஆகும்.

அந்த கோப்பில் கூறி இருப்பதாவது:- ரூ.47 கோடி செலவில் போட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நடத்தப்படும் 2022-23-ம் ஆண்டுக்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் தமிழகத்தின் தொன்மையான பாரம்பரிய விளையாட்டுகளான கபடி, சிலம்பாட்டம் சேர்க்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரையும் உள்ளடக்கி 16 பிரிவுகளில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை 47 கோடியே 4 லட்சத்து 72 ஆயிரத்து 800 ரூபாய் செலவில் நடத்த அனுமதிக்கப்படுகிறது. இந்த போட்டிகளை சிறப்பாக நடத்திட மாநில ஒருங்கிணைப்பு குழு, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு குழு, மாவட்ட அளவில் போட்டிகளை நடத்தும் குழு ஆகிய குழுக்கள் அமைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்ததாக நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கும் கோப்பிலும், சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில் பெரு நாட்டின் லிமா நகரில் நடைபெற்ற ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் ஸ்டாண்டர்டு பிஸ்டல் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நிவேதிதாவுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். இதன்பின்பு, நலிந்த நிலையில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் கபடி வீரர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜாபர், கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி கிறிஸ்டோபர், வலுதூக்கும் வீரர்களான சேலம் பொன்சடையன், கோவை ஜெகநாதன், தென்காசி குத்தாலிங்கம், பளு தூக்கும் வீரரான திருவாரூர் கோவிந்தராஜ், கோவை பூப்பந்து விளையாட்டு வீரர் கலீல்ரகுமான், கன்னியாகுமரி செஸ் விளையாட்டு வீரர் சிவராஜன் ஆகிய 9 பேருக்கு ஓய்வூதிய ஆணையை வழங்கினார்.

அதேபோன்று துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற நிவேதிதாவுக்கு ரூ.4 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையையும் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இதைத்தொடர்ந்து இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் துறையின் உயர் அதிகாரிகள் உதயநிதி ஸ்டாலினுக்கு பூங்கொத்து, புத்தகம் ஆகியவற்றை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.