தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை கட்டண விபர அறிவிப்பு பலகை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

0
9

தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை கட்டண விபர அறிவிப்பு பலகை- அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூடில் கொரோனா சிகிச்சை மையம் செயல்படுகிறது. 500-க்கும் மேற்பட்ட ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் இந்த மையம் செயல்பட்டு வருகிறது.

அங்கு அரசு சார்பில் கூடுதலாக 100 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அதை தொடர்ந்து அங்கு பணியாற்றும் 750 முன்கள பணியாளர்களுக்கு மளிகை பொருட்களையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

சென்னையில் ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது.

சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருப்பதை தவிர்க்க ‘ஜீரோ டிலே’ வார்டு 132 படுக்கைகளுடன் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆம்புலன்சுகளில் அழைத்து வரப்படும் நோயாளிகள் உடனடியாக அந்த வார்டுக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள்.

பின்னர் தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கைகள் காலியானதும் அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும்.

இதன் மூலம் ஆம்புலன்சுகளிலேயே மணிக்கணக்கில் நோயாளிகள் காக்க வைக்கப்படுவதும் அதன் மூலம் உயிரிழப்புகள் ஏற்படுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது.

இதே போன்ற ஜீரோ டிலே வார்டுகளை தமிழகம் முழுவதும் அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் குறைந்தபட்சம் 10 படுக்கைகளுடன் உருவாக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் தீவிரமில்லாத கொரோனா சிகிச்சை கட்டணம் விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. மிதமான ஆக்சிஜன் உதவி இல்லாமல் ஒரு நாள் சிகிச்சை கட்டணமாக ரூ.5 ஆயிரமும், ஆக்சிஜன் உதவியுடன் கூடிய சிகிச்சை கட்டணமாக ரூ.15 ஆயிரமும் நிர்ணயிக்கப்படுகிறது.

சென்னை, மதுரை, கோவை மற்றும் அடையாளம் காணப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதல் கட்டணமாகும். சேலம், திருச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தஞ்சை, ஈரோடு மற்றும் அடையாளம் காணப்பட்ட ஆஸ்பத்திரிகளுக்கு ரூ.3 ஆயிரம் கூடுதல் கட்டணமாகும். மேலும் நகர வகை பிரிவின்படி தரக்கட்டணமும் (ஏ1 மற்றும் ஏ2) வழங்கப்படும்.

முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிதீவிர கொரோனா சிகிச்சை கட்டணம் விவரம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. தீவிர சிகிச்சை பிரிவு வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய ஒரு நாள் சிகிச்சை கட்டணமாக ரூ.35 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஊடுருவாத வெண்டிலேட்டர் வசதி கொண்ட ஒரு நாள் சிகிச்சை கட்டணமாக ரூ.30 ஆயிரமும், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய ஒருநாள் சிகிச்சைக்காக ரூ. 25 ஆயிரமும் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விபரங்களை சம்பந்தப்பட்ட அனைத்து தனியார் ஆஸ்பத்திரிகளும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெரிய அளவிளான அறிவிப்பு பலகைகளில் வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவை இருக்கிறது. மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலத்தில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வர நடவடிக்கை எடுத்து இருக்கிறது அரசு. இதற்காக தொழில்துறை உடன் இணைந்து பணிகள் நடக்கிறது. அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.