சென்னையில் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராகும் 5 லட்சம் இளைஞர்கள்

0
34

சென்னையில் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராகும் 5 லட்சம் இளைஞர்கள்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுக்கு வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 61 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டு கவுன்சிலர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இவர்களில் 5 லட்சம் இளைஞர்கள் முதல்முறையாக ஓட்டு போடுவதற்கு தயாராக உள்ளனர். ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. தற்போது 11 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படுவதால் முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுப்போட ஆர்வமாக உள்ளனர்.

இந்த புதிய வாக்காளர்கள் அனைவருமே புதுமுகங்கள் கவுன்சிலர்களாக வர வேண்டும் என்பதையே எதிர்பார்க்கிறார்கள். இது தொடர்பாக புதிய வாக்காளர்களில் சிலர் கூறியதாவது:-

ஒரு கவுன்சிலரின் பணி என்ன என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால் நாங்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க ஆர்வமாக உள்ளோம். எங்கள் வாக்கு மாற்றத்தைக் கொண்டு வருமா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால் நாங்கள் புதுமுக வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக வருவதை விரும்புகிறோம்.

அரசியல்வாதிகளின் செயல்பாடுகளை நாங்கள் மாற்ற விரும்புகிறோம். மாநில தேர்தல் ஆணையம் வழங்கி உள்ள செயலி மற்றும் போர்ட்டல்களை பயன்படுத்தி வார்டுகளில் உள்ள அனைத்து வேட்பாளர்களையும் பார்த்து வருகிறோம்.

அவர்களில் யார் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கை வருகிறதோ அவர்களுக்கு வாக்கு அளிப்போம்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால்தான் பல வேலைகளை செய்ய முடிகிறது. இது துரதிருஷ்டவசமானது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ‘‘புதிய வாக்காளர்கள் நல்லது செய்யும் வேட்பாளர்களுக்கு ஓட்டு போட வேண்டும். இளைஞர்களின் வாக்கு அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவதை அவர்கள் உணர்த்த வேண்டும். அனைத்து தேர்தல்களையும் விட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது மிகவும் முக்கியமானது. இதை இளைஞர்கள் புரிந்துகொண்டு வாக்களிக்க வேண்டும்’’ என்றார்.