ஓணம் பண்டிகை : மூவுலகத்தையும் மூன்றடியில் அளந்த உலகளந்த பெருமாள் – வாமன அவதாரம்

0
410

ஓணம் பண்டிகை : மூவுலகத்தையும் மூன்றடியில் அளந்த உலகளந்த பெருமாள் – வாமன அவதாரம்

சென்னை: ஆவணி திருவோணம் வாமன ஜெயந்தியாக இன்று வைணவர்களால் கொண்டாடப்படுகிறது. மகாவிஷ்ணுவின் தசாவாதாரங்களில் வாமன அவதாரம் ஐந்தாவது அவதாரமாகும். இந்த அவதாரம் திரேதா யுகத்தில் நடைபெற்றது.

ஓங்கி உலகளந்த உத்தமன் வாமனன் அவதரித்த நாளான இன்று வாமன அவதாரம் பற்றியும் மகாபலி சக்கரவர்த்தியின் புகழையும் அறிந்து கொள்வோம்.

வாமனன் என்றால் குள்ள வடிவினன் என்பது பொருள். வாமன அவதாரத்தில் அந்தணச்சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ குடையுடனும், மற்றொரு கையில் கமண்டலத்தைப் பிடித்தும் அருளுகிறார் பகாவான் விஷ்ணு.

மகாபலி சக்கரவர்த்தியை ரட்சிக்க அவரின் புகழை உலகறியச்செய்ய வாமனனாக அவதரித்தார் மகாவிஷ்ணு.

மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் ஆளுவதற்காக யாகம் செய்தார். அதைப்பார்த்து தேவர்கள் பயந்தனர். விஷ்ணுவிடம் வேண்டினர். அதிதி காஷ்யபர் தம்பதியின் மகனாக வாமனனாக அவதரித்தார் மகாவிஷ்ணு. மகாபலி நடத்திய யாகத்திற்கு வந்த வாமனன் மூன்றடி நிலத்தினை தானமாக வாமனன் கேட்டான். சுக்ராசாரியரின் சொல்லைக் கேட்டாமல் மூன்றடி தானம் தர மகாபலி சம்மதித்தான். அப்போது இறைவன் திரிவிக்ரமனாக உருவம் கொண்டு வானத்தை ஓரடியாகவும், பூமியை ஓரடியாகவும் அளந்து மூன்றாவது அடியை மகாபலிச்சக்ரவர்த்தியின் தலையில் வைத்து பாதளலோகத்திற்கு அரசனாக்கினார். திருவோணம் திருநாள் கொண்டாடப்படும் இந்த நாளில் நாம் வாமன அவதாரம் பற்றியும் மகாபலியின் புகழையும் அறிந்து கொள்வோம்

சிவன் கோயில் விளக்கு அணையும் நிலையில் இருந்தது. அப்போது, கோயிலுக்குள் புகுந்த எலி ஒன்று எதேச்சையாக விளக்கில் ஏறியது. அதன் வால், திரி மீது பட்டது. திரி தூண்டப்பட்டு விளக்கு பிரகாசமானது. தன்னையறியாமல் எலி செய்த அந்த காரியம் அதற்கு புண்ணியத்தை தந்தது. அடுத்த ஜென்மத்தில் எலிக்கு சக்கரவர்த்தி யோகத்தை தந்தருளினார் சிவபெருமான். அந்த எலிதான் அடுத்த பிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக அவதரித்தது.

மலையாள தேசம்தான் மகாபலி சக்கரவர்த்தியின் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இருந்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் அதிசயப்படும்படியும், பொறாமை கொள்ளும் வகையிலும் நல்லாட்சி செய்தார் மகாபலி. மகாபலியின் புகழ் பலதிசை எங்கும் பரவியது. தன்னை நாடி வந்தவர்களுக்கு எல்லாம் கேட்டதை வாரி வாரி வழங்கியும் பொற்கால ஆட்சி நடத்தி வந்தார். அவரை அசுர குரு சுக்கிராச்சாரியார் வழிநடத்தி வந்தார்.


தேவர்கள் பொறாமைப்பட்டு தேவேந்திரனிடம் முறையிட்டனர். அவர் மகா விஷ்ணுவிடம் கூறினார். மகாபலியின் புகழுடன் பல யுகங்களுக்கும் நிலைத்திருக்குமாறு செய்ய முடிவு செய்தார். குள்ளமான வாமனனாக அவதாரம் எடுத்து வந்தார் மகாவிஷ்ணு. மகாபலியிடம் சென்று தானம் கேட்டார் வாமனன்.

விஷ்ணுதான் வாமன அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்பதை ஞான திருஷ்டியில் தெரிந்துகொண்டார் சுக்கிராச்சாரியார்.வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணு, அவசரப்பட்டு எந்த வாக்கும் கொடுத்துவிடாதே. அது உன் ஆட்சி, அதிகாரம் மட்டுமின்றி ஆயுளுக்கும் ஆபத்தாய் முடியும் என்று மகாபலியை எச்சரித்தார்.

மகாபலியோ அதைக்கேட்டு அதிர்ச்சியடையவில்லை மகிழ்ச்சியடைந்தார். என்னுடைய நல்லாட்சியை அகில உலகமும் பாராட்டுகிறது. இதைக் கேள்விப்பட்டு பகவானே இறங்கி வருவது நான் செய்த பாக்கியம். எல்லோரும் கடவுளிடம்தான் கேட்பார்கள். அந்த கடவுளே இறங்கிவந்து என்னிடம் கேட்கிறார். இது எனக்கு பெருமைதான் அவருக்கு கொடுப்பதைவிட வேறு என்ன புண்ணியம் இருக்கப் போகிறது என்று சந்தோசமாக தயாரானார் மகாபலி.

மகாபலியிடம் வந்த வாமனன் தனக்கு மூன்றடி நிலம் தேவைப்படுவதாக கூறினார். குள்ளமான உருவத்துடன் தன்னிடம் வந்த வாமனனை மகாபலி விழுந்து வணங்கினார். மூன்றடி நிலம்தானே.. தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். இடையே புகுந்து தடுத்தார் சுக்கிராச்சாரியார். ஆனால் மகாபலியோ கமண்டலத்தில் இருந்து நீரைப் பிடித்து மூன்றடி நிலத்தை தாரை வார்த்துக் கொடுத்தார்.

குள்ள வாமனனாக இருந்த மகாவிஷ்ணு, ஓங்கி உலகளந்த உத்தமனாக விண்ணுக்கும், மண்ணுக்குமாக உயர்ந்து நின்றார். ஒரு பாதத்தை பூமியிலும் இன்னொரு பாதத்தை ஆகாயத்திலும் வைத்தார். ‘மூன்றடி கொடுப்பதாக சொன்னாய். இரண்டு அடி அளந்துவிட்டேன். மூன்றாவது அடிக்கு இடமில்லையே என்று வாமனன் கேட்க,இதோ எடுத்துக்கொள்ளுங்கள் என்று தலைகுனிந்தார் மகாபலி. உடனே அவரது தலையில் பாதத்தை வைத்து அழுத்தி பாதாள லோகத்திற்கு அனுப்பினார் வாமனன்.

கொடை வள்ளலாக திகழும் மகாபலியின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கவும் அருள் செய்தார்.

மகாவிஷ்ணுவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார் மகாபலி. என் நாட்டு மக்களை நான் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது. ஆண்டு தோறும் ஒருநாளில் அவர்களை நான் சந்திக்க வரம் அருள வேண்டும் என வேண்டினார். அவ்வாறே நடக்க அருள் செய்தார் மகாவிஷ்ணு. தன் நாட்டு மக்கள் வளமாக, சந்தோஷமாக இருக்கிறார்களா என்று பார்க்க ஆண்டுதோறும் வருகிறார் மகாபலி சக்கரவர்த்தி.