என்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடக்கி வைத்தவர் இனமான பேராசிரியர்.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!

0
152

“என்னுடைய அரசியல் வாழ்க்கையை தொடக்கி வைத்தவர் இனமான பேராசிரியர்”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (18.12.2022) இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரை:-

காலத்தால் மூத்தமொழி பெற்ற பிள்ளை

ஞானத்தைத் தொழில் கேட்க வைத்திட்ட

கோலச்சொல் அறிஞர்க்கு வாய்த்த தம்பி

ஆலமரக் கழகத்தின் ஆணிவேர்த் தொணடர்க்கும் தோழன்

ஓலமிகும் எதிர்ப்புதனை ஒடுக்குகின்ற உடன்பிறப்பு

சீலமிகு பேராசிரியர் அன்பழகர்க்குப்

பிறந்தநாள் வாழ்த்து சொல்வோம்!

– என்று எழுதிய கலைஞரின் வரிகளால் இனமானப் பேராசிரியப் பெருந்தகையின் புகழைப் போற்றுவோம் என்று முதலில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இங்கே பலர் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

முதலில் நான் மனிதன்.

இரண்டாவது நான் அன்பழகன்.

மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன்.

நான்காவது நான் அண்ணாவின் தம்பி.

ஐந்தாவது கலைஞரின் தோழன் – என்று சொல்லி இறுதிமூச்சு வரையில் வாழ்ந்தவர் நம்முடைய இனமானப் பேராசிரியர் அவர்கள்.

ஆறாவது, உரிமையோடு நான் கூற விரும்புவது, அவர் எனது பெரியப்பா.

‘எனக்கு இரண்டு அக்காள் உண்டு – ஆனால் அண்ணன் இல்லை. அண்ணனாக நினைப்பது பேராசிரியர் அவர்களைத்தான்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள். சொன்னது மட்டுமல்ல அப்படியே நினைத்தார். மதித்தார், போற்றினார்.

அந்த வகையில் நானும் பேராசிரியர் அவர்களை பெரியப்பாவாக நினைத்தேன். மதித்தேன், போற்றி வந்தேன், இப்போதும் அப்படித்தான்.

இன்று அவருக்கு நூற்றாண்டு விழாவை எடுத்துக் கொண்டு இருக்கிறோம். இனமானப் பேராசிரியரின் நூற்றாண்டு தொடக்க விழாவினையொட்டி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்தில் கடந்த 19.12.2021 அன்று அவருடைய மார்பளவு சிலையை திறந்து வைத்தோம்.

கருவூல கணக்குத் தொடர்பான அலுவலகங்கள் உள்ளிட்ட 15 அரசு அலுவலகங்கள் இயங்கி வரும் அந்த வளாகத்திற்கு “பேராசிரியர் அன்பழகன் மாளிகை” எனப் பெயர் சூட்டியிருக்கிறோம்.

இனமானப் பேராசிரியர் அவர்கள் படைத்த நூல்களையும் நாட்டுடைமையாக்கி, அந்த நூலுரிமைத் தொகையை முழுமையாக பேராசிரியர் அவர்களின் குடும்பத்தாருக்கு வழங்கியிருக்கிறோம்.

பேராசிரியருக்கு நிரந்தரப் புகழ் சேர்க்கும் வகையில் 7,500 கோடி ரூபாய் மதிப்பில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது இந்த திராவிட மாடல் ஆட்சியில்.

நேற்று முன்தினம் 16-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பேராசிரியர் நூற்றாண்டு விழாவை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கழக அமைப்புகளின் சார்பில் இதுவரையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 100 பொதுக்கூட்டங்களை நடத்தி முடித்திருக்கிறோம். நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் கவியரங்கம் மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது.

இன்று நம்முடைய மதச்சார்பற்ற கூட்டணியில் இடம்பெற்றிருக்கக்கூடிய கட்சியின் தலைவர்கள் பங்கேற்கக்கூடிய இந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது.

நுங்கம்பாக்கம் பள்ளிக்கல்வி இயக்ககத்தில் அவரது திருவுருவச்சிலை இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதக் காலத்திற்குள்ளாக திறக்கப்படவிருக்கிறது. அதற்கு முன்கூட்டியே நாளையதினம் அந்தக் கட்டடத்திற்கு பேராசிரியர் அன்பழகன் அவர்களுடைய பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

இப்படி இந்த ஆண்டு முழுவதும் அவருடைய நூற்றாண்டு விழாவை நிறைவு விழாவாக நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இன்று இந்த விழா பெரியார் திடலில் நடப்பது மிகமிகப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.

ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள், பேராசிரியருடைய மணிவிழா இதே பெரியார் திடலில் அவர் யாரை தலைவராக ஏற்றுக் கொண்டோரோ அந்தத் தலைவர் கலைஞர் அவர்களே முன்நின்று நடத்திய அந்த மணிவிழா.

அந்த விழாவில் பேராசிரியர் அவர்கள் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார்-

” கலைஞர் கோப்பெருஞ்சோழன் என்றால்

நான் பிசிராந்தையாராக என்றும் இருப்பேன்” என்று குறிப்பிட்டார்.

சொன்னபடியே இறுதிவரை இணைபிரியாது வாழ்ந்தார். இதே பெரியார் திடலில் பேராசிரியர் அவர்களின் வாழ்வும் தொண்டும் நூல் வெளியீட்டு விழா 2015-ஆம் ஆண்டு நடந்தது. அந்த விழாவிற்கு கலைவர் கலைஞர் அவர்கள் வரவேண்டும், சிறிது உடல்நலிவுற்று வீட்டில் இருக்கிறார். அவர் பங்கெடுப்பாரா, பங்கெடுக்க மாட்டாரா என்ற ஒரு கேள்விக்குறி.

பேராசிரியர் இல்லத்தினர் கூட கோபாலபுரம் வந்து தலைவரிடத்தில் கேட்டார்கள். ”நான் நல்லாதான் இருக்கேன்… உடல் நலமில்லாமல் இருந்தாலும் நிச்சயம் வருவேன்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அவரிடத்திலே சொன்னார். “நான் வரவில்லை என்பதற்காகப் பேராசிரியர் வருந்துகிறாரோ இல்லையோ- நான் நலமாக இருந்தால் போதும் என்று கருதுகிற உயிர் நண்பர் பேராசிரியர்” என்று உருக்கமாக குறிப்பிட்டுச் சொன்னார்.

என்னைப் பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றில் இரண்டு பெரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு – புரிதலோடு இருந்துள்ளார்கள் என்றால் அது கலைஞரும் பேராசிரியருமாகத்தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் அவர்களிடம் சொல்லிவிட்டுச் செய்ய வேண்டும் என்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள். கலைஞர் செய்தால் சரியாகத்தான் இருக்கும் என்று நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியலில் பார்ப்பது என்பது மிக மிக மிக அரிது.

இந்த இயக்கத்தை தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு – தனக்குப் பிறகு வழிநடத்தத் தகுதியானவன் ஸ்டாலின்தான் என்பதை முதலில் சொன்னவர் எனது பெரியப்பா பேராசிரியர் அவர்கள்தான். அதாவது கலைஞருக்கு முன்னதாகவே சொன்னவரும் என்னுடைய பெரியப்பா நம்முடைய பேராசிரியர் தான்.

என்னுடையது அரசியல் வாழ்க்கையே அவரிடத்தில் தான் ஆரம்பித்தது. பதிமூன்று வயதில் பள்ளிச் சிறுவனாக, பள்ளி மாணவனாக இருந்தபோது, கோபாலபுரம் பகுதியில் இளைஞர் தி.மு.க. என்ற ஒரு அமைப்பை 20, 25 சிறுவர்களோடு சேர்ந்து நடத்தி, அதற்கென்று ஒரு அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று கோபாலபுரத்தில் தெருவின் மூலைப் பகுதியில், ஐந்தாறு கடைகள் இருக்கிறது, அதில் ஒரு கடை முடிதிருத்தும் நிலையம். அந்த இடத்தில் தான் என்னுடைய அலுவலகத்தை ஆரம்பித்தேன். அதைத் திறந்து வைக்க வேண்டுமென்று தலைவர் கலைஞரிடத்தில், பேராசிரியரிடத்தில் சொல்லிக் கொண்டிருந்தபோது இருவரும் கிளம்பினார்கள். நடந்தே வந்தார்கள், கோபாலபுரம் தெருவில் நடந்தே வந்து, அதைத் திறந்துவைக்க கத்திரிக்கோலை எடுத்து தலைவரிடத்தில் கொடுக்கிறேன், தலைவர் உடனே, நான் திறக்க மாட்டேன், அவரிடத்தில் கொடுத்து திறக்கச் சொல்லு என்ற பேராசிரியரிடத்தில் கொடுத்தார். ஆக, முதன்முதலில் அந்த அலுவலகத்தை திறந்து வைத்ததே என் பெரியப்பா பேராசிரியர் அவர்கள். அவர் கொடுத்த அந்த உற்சாகத்தின், ஊக்கத்தின் அடிப்படையில்தான் இன்று அண்ணா அறிவாலயத்தையே கட்டிக் காக்கக்கூடிய ஒரு மிகப்பெரிய பொறுப்பை ஏற்கக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. நான் அதைத்தான் நினைத்து பார்க்கிறேன். ஏன், கோட்டையைக் காக்கக்கூடிய அந்தப் பொறுப்பும் இன்றைக்கு கிடைத்திருக்கிறது என்றால், இந்தத் தமிழகத்தைக் காக்கக்கூடிய அந்தப் பொறுப்பும் எனக்கு கிடைத்திருக்கிறது என்றால், அந்த இளைஞர் அணிக்கு முதன்முதலாக அன்பகம் எங்களுக்கு எப்படி கிடைத்தது? அதற்கும் காரணம் பேராசிரியர் தான். இளைஞரணியின் செயலாளராக நான் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தலைமைக் கழகமாக செயல்பட்டுக் கொண்டிருந்த அன்பகத்திலிருந்து காலி செய்து அறிவாலயத்திற்கு தலைமைக் கழகம் வருகிறது.

அப்போது அன்பகத்தை எப்படி பயன்படுத்துவது என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, தொழிலாளர் அணி கேட்கிறது, மாணவர் அணி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள், இப்படி பல அணிகள் கேட்டுக் கொண்டிருக்கும்போது, இளைஞர் அணியின் சார்பாக நானும் போய்க் கேட்டேன். கலைஞர் முடியவே முடியாது, பிள்ளைக்கு கொடுத்துவிட்டார்கள் என்று கெட்ட பெயர் எனக்க வந்துவிடும், நான் கொடுக்க முடியாது என்று சொன்னார். அப்போது பேராசிரியர் ஒரு யோசனை சொன்னார், யார் இந்தக் கட்சிக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியை கொண்டுவந்து கொடுக்கிறாரோ அவரிடத்தில் கொடுக்கலாம் என்ற சொன்னார். ஆறு மாதம் கெடு கொடுத்தார்கள், ஐந்தே மாதங்களில் பத்து இலட்சம் அல்ல, 11 லட்சம் ரூபாயை திரட்டிக் கொண்டுபோய் கொடுத்தோம். ஆக, போட்டி வைத்து, அந்தப் போட்டியின் மூலமாக அந்த இளைஞர் அணி அமைப்புக்கு அந்தக் கட்டடத்தைப் பெற்றுத் தந்தவரும் என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள்தான்.

‘கலைஞருடைய ஆற்றல் ஸ்டாலினின் செயலில் தெரிகிறது’ என்று நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்னைப் பாராட்டியவர் பேராசிரியர் அவர்கள்.

மு.க.ஸ்டாலின் வளர்வதைப் போல் இன்னும் நூறு ஸ்டாலின்கள் வரவேண்டும் என்று மேடைகளில் என்னைப் பாராட்டியவரும் பேராசிரியர் அவர்கள். வாரிசு, வாரிசு என்று இன்றைக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார்களே, அந்த வாரிசு என்ற குற்றச்சாட்டை என் மீது சுமத்தியபோது, கல்வெட்டு போல எனக்கு பாராட்டுப் பத்திரம் கொடுத்தவரும் நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான்.

அவர் சொன்னார், ”கலைஞருக்கு மட்டுமல்ல எனக்கும் ஸ்டாலின் வாரிசுதான். அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க வேண்டிய கடமை அவருக்கு உள்ளது” என்று துணிச்சலாகச் சொன்னவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான்.

இவை அனைத்துக்கும் மேலாக, நம்முடைய பொதுச் செயலாளர் அவர்கள் சொன்னதுபோல, கழகத்தின் செயல் தலைவராக என்னை முன்மொழிந்தவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான். தலைவர் கலைஞர் அவர்களுடைய மறைவிற்குப் பிறகு, என்னை தலைவராக முன்மொழிந்தவரும் என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள்தான். நான் இன்று இந்தளவுக்குத் தகுதி பெற்றவனாக இருக்கக் காரணம், அனைத்துக்கும் காரணம் நம்முடைய பேராசிரியர் அவர்கள்தான். அவர் இன்னும் சில ஆண்டுகாலம் வாழ்வார் என்று நான் ஆசைப்பட்டேன்.

அவர் உடல் நலிவுற்று இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, நானும், நம்முடைய பொதுச்செயலாளர் அவர்களும், நம்முடைய கழக முன்னோடிகளும் எல்லாம் அடிக்கடி போய்ப் பார்த்தோம். நாங்கள் சொல்லிவிட்டு வருவோம், இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கப் போகிறீர்கள், நூற்றாண்டு விழாவை உங்களைவைத்து நாங்கள் கொண்டாடப் போகிறோம் என்று சொல்லிவிட்டு, சொல்லிவிட்டு வருவோம். ஆனால், அந்த வாய்ப்பு கிட்டாமல் போய்விட்டது. அந்த வாய்ப்பு கிட்டாமல் போனாலும், அவர் மறைவிற்குப் பிறகு, இந்த நூற்றாண்டு விழாவை எவ்வளவு சிறப்பாக நடத்த வேண்டுமோ அவ்வளவு சிறப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்து நடத்திக் கொண்டிருக்கிறோம். கோப்பெருஞ்சோழனைத் தொடர்ந்த பிசிராந்தையாராகப் பேராசிரியர் அவர்கள் நம்மை விட்டுவிட்டுச் சென்று விட்டார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த பேராசிரியரை வாரத்துக்கு இரண்டு மூன்று நாட்கள் நாங்கள் சென்று பார்க்கும்போது எல்லாம் அவர் சொல்வார், “எவ்வளவு பணிகள் இருக்கிறது, நீ ஏன் வருகிறாய், நான் நன்றாகத்தான் இருக்கிறேன்” என்று பலமுறை சொல்லியிருக்கிறார். அந்த புன்சிரிப்பு முகம் இன்னமும் என் நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அவர் எந்தளவுக்கு கோபக்காரரோ – அந்தளவுக்குப் பாசக்காரர் என்பதை மறந்துவிட முடியாது.

பேராசிரியருக்கு இணை பேராசிரியர்தான். இன்றைக்கு அவர் புகழை நாம் போற்றிக் கொண்டு இருக்கிறோம் என்றால் அவரைப் பெருமைப்படுத்துவதற்காக மட்டுமல்ல, தலைவர் கலைஞரும்; இனமானப் பேராசிரியரும் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அனைத்துப் பெருமைகளையும் பெற்றுவிட்டார்கள். இனிமேல் நாம் பெருமைப்படுத்த வேண்டிய அவசியமே கிடையாது.

இன்றைக்கு பேராசிரியரை நாம் நினைவுகூருகிறோம் என்றால், அவருடைய வாழ்நாளில் பார்த்தீர்களென்றால், அவர் எழுதிய புத்தகங்களாக இருந்தாலும், அவர் பேசிய பேச்சுக்களாக இருந்தாலும், அவர் எழுதிய கட்டுரைகளாக இருந்தாலும், அவர், தன்மானம், சுயமரியாதை, இனமானம், இந்த வார்த்தைகள் இல்லாமல் அவர் என்றைக்கும் இருந்ததே கிடையாது.

வாழ்ந்தால் மக்களுக்காக வாழ்வேன்.

தமிழினத்துக்காக வாழ்வேன்.

தாழ்ந்து போன தமிழினம் தலைநிமிர வாழ்வேன்.

உரிமை இழந்த இனம் உரிமை பெற வாழ்வேன்- என்று உறுதி எடுத்துக் கொண்டு வாழ்ந்தவர் நம்முடைய பேராசிரியர் அவர்கள்.

ஆக, அவருடைய நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறபோது, நாமும் அவர் வழியிலே நடைபோட வேண்டுமென்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன், உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த தன்மானம், இனமானம் இரண்டையும் தமிழ் மக்கள் நெஞ்சினில் விதைத்தது திராவிட இயக்கத்தின் வெற்றி!

திராவிட இயக்கக் கொள்கையை மையப் பொருளாகக் கொண்டுதான் இன்று திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை வலிமையை நான் கலைஞரிடம் இருந்தும் பேராசிரியரிடம் இருந்தும்தான் கற்றுக் கொண்டேன்.

அதே போல் அனைவரும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான், நம்முடைய இளைஞர் அணியின் சார்பில், மாணவர் அணியின் சார்பிலே 234 தொகுதிகளில் திராவிட மாடல் பயிற்சி பாசறைக் கூட்டம் என்ற அந்தக் கூட்டங்களை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். நடத்தி முடித்திருக்கக்கூடிய இளைஞர் அணிக்கும், மாணவர் அணிக்கும் என்னுடைய வாழ்த்துகளை இந்த நேரத்தில் தெரிவிக்கின்ற அதே நேரத்தில், அது ஒன்றிய அளவிலே, கிராம அளவிலே, பட்டித் தொட்டிகள்தோறும் அந்த பாசறைக் கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். இதுதான் பேராசிரியருக்கு செலுத்த வேண்டிய உண்மையான மரியாதையாக அமைந்திட முடியும், அவருடைய புகழுக்கு பெருமை சேர்த்திட முடியும்.

தமிழன் இருக்கும் வரை,

தமிழ்நாடு இருக்கும் வரை,

திராவிடம் இருக்கும் வரை,

திருக்குறள் இருக்கும் வரை,

பேராசிரியரின் புகழும் இருக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.