உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுகின்றன – இங்கிலாந்து ஆய்வு முடிவு

0
5

உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுகின்றன – இங்கிலாந்து ஆய்வு முடிவு

லண்டன்: உருமாறிய கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் மிக வலிமையாக செயல்படுவது இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

‘பி.1.617.2’ என்ற உருமாறிய கொரோனா முதன் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் மிகுந்த வலிமையுடன் செயல்படுகின்றன என்பது இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு மூலம் தெரிய வந்துள்ளது.

இது குறித்து இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை கூறுகையில், ‘பி.1.617.2’ என்ற உருமாறிய கொரோனாவுக்கு எதிராக பைசர் மற்றும் பயோஎன்டெக் கூட்டாக உருவாக்கியுள்ள தடுப்பூசி 88 சதவீத செயல்படும் திறனைக்கொண்டுள்ளது. இதேபோன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனேகா மருந்து நிறுவனமும் உருவாக்கியுள்ள தடுப்பூசி இரண்டாவது டோஸ் செலுத்திய பின்னர் 60 சதவீத செயல்திறனைக் கொண்டுள்ளது என்று தெரிவித்தது.

இருப்பினும் இவ்விரு தடுப்பூசிகளையும் ஒரே ஒரு டோஸ் செலுத்திய நிலையில், அதன் செயல்திறன் 33 சதவீமாக உள்ளது எனவும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி இங்கிலாந்து சுகாதார மந்திரி மேத் ஹான்காக் கூறும்போது, “இந்த புதிய சான்று புதுமையானது. அது நாம் நேசிக்கிற மக்களைப் பாதுகாப்பதில் தடுப்பூசி திட்டம் எவ்வளவு மதிப்பு மிக்கது என்பதை நிரூபிக்கிறது. மேலும் கொரோனா வைரஸ் வகைகளுக்கு எதிராக வலுவான பாதுகாப்பைப் பெறுவதில் இரண்டாவது டோஸ் ஊசி போட்டுக்கொள்வது எத்தனை முக்கியமானது என்பதுவும் தெளிவாகிறது” என குறிப்பிட்டார்.

இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை மேலும் கூறுகையில், “‘பி.1.617.2’ வைரசின் கடுமையான பாதிப்புக்கு எதிராக தடுப்பூசி செயல்திறனை மதிப்பிடுவதற்கு தற்போது போதுமான வழக்குகள் (பாதிப்புக்கு ஆளானோர்) இல்லை, பின்தொடர்வதற்கான காலமும் இல்லை. ஆனால் வருங்காலத்தில் தொடர்ந்து மதிப்பீடு செய்வோம்” என தெரிவித்தது.