உயிர்காக்கும் சிறப்பான நடவடிக்கை – தமிழக அரசின் திட்டத்தைப் பாராட்டிய ICMR மருத்துவ நிபுணர்!

0
15

உயிர்காக்கும் சிறப்பான நடவடிக்கை – தமிழக அரசின் திட்டத்தைப் பாராட்டிய ICMR மருத்துவ நிபுணர்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிதீவிரமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.

இந்நிலையில்,கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சித்த மருத்துவ சிகிச்சை மையம், ஆக்சிஜன் உற்பத்தி, படுக்கைகள் அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் மட்டும் தினசரி தொற்று எண்ணிக்கை 7 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வருவதால், ஆம்புலன்ஸ் கிடைப்பதில் மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கத்தில், கார்களை ஆம்புலன்ஸாக மாற்றி நோயாளிகளை அழைத்துச் செல்லும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில், ஆம்புலன்ஸ் வசதி கொண்ட 250 கார்களை சிறப்பு அவசர ஊர்தியாக பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதையடுத்து முதற்கட்டமாக 50 அவசர ஊர்திகளை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ள இந்த திட்டத்திற்கு ஐ.சி.எம்.ஆர் மருத்துவ நிபுணர் பிரப்தீப் கவுர் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சிறப்பான நடவடிக்கை. ஆம்புலன்ஸை மட்டும் நம்பி இருக்காமல் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பு அவசர ஊர்தி திட்டம் உயிர்காக்கும் நடவடிக்கை” என்று அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.