இந்தியாவில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை அச்சம்?

0
10

இந்தியாவில் மீண்டும் கொரோனா இரண்டாம் அலை அச்சம்?

கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, இந்தாண்டின் அதிகபட்சமாக இந்தியாவில் புதிதாக 23,285 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மேலும் 117 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 1,97,237 ஆக உயர்ந்துள்ளது. இதனால் வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் இரண்டாம் அலை ஏற்பட்டிருக்கக்கூடும் என நான்கு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

முதலாவதாக, நாடு முழுவதும் மொத்த பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அதன்படி ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி 19,521 ஆக இருந்த பாதிப்பு, பிப்ரவரி 11ம் தேதி 10,988 ஆக குறைந்து, தற்போது 23000மாக உயர்ந்துள்ளது. இதனால் பிப்ரவரி மாதத்தோடு முதலாம் அலை நிறைவடைந்து, இரண்டாவது அலை தொடங்கியதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

இரண்டாவதாக, சில மாநிலங்களில் தேசிய சராசரியை விட பாதிப்புகள் இருமடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் முதலாம் அலையை விட, எட்டு மடங்கு பாதிப்புகள் உயர்ந்துள்ளன. ஜனவரி 27ல் 181 ஆக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது ஒரே நாளில் 1300 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. பஞ்சாபை தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் பாதிப்பு 300 சதவீதம் உயர்ந்துள்ளது. அதன்படி பிப்ரவரி 11ல் 2415 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது 14,000 பேர் ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த வாரத்தில் பதிவான புதிய பாதிப்புகளில் 57 விழுக்காடு மராட்டிய மாநிலத்தில் பதிவாகியுள்ளது. ஹரியானாவிலும் கடந்த ஒரு வார பாதிப்பு 300 சதவீதம் உயர்ந்துள்ளது.

அதேபோல, கடந்த ஒரு வாரத்தில் நாடு முழுவதும் பரிசோதனைக்கு எடுக்கப்பட்ட மொத்த மாதிரிகளில், 2. 6 சதவீதம் அளவுக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பிப்ரவரி 14ம் தேதி 1.6 விழுக்காடாக இருந்த POSITIVITY RATE தற்போது அதிகரித்துள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த 20 நாட்களில் ஏற்றம் கண்டுள்ளது. அந்தவகையில் பிப்ரவரி 17 ம் தேதி வரை இறங்குமுகத்தில் இருந்த சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, தற்போது நாள் ஒன்றுக்கு 2200 ஆக உயர்ந்து, 1,97,237ஆக அதிகரித்துள்ளது.