அமெரிக்க நாடாளுமன்றக் குழுவுடன் பிரதமர் சந்திப்பு

0
28

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவுடன் பிரதமர் சந்திப்பு

புதுதில்லி, நவம்பர் 13, 2021

பிரதமர் திரு.நரேந்திர மோடி, செனட் சபை உறுப்பினர் ஜான் கார்னின் தலைமையிலான அமெரிக்க நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்தார். இந்தக் குழுவில் செனட் சபை உறுப்பினர்கள் மைக்கேல் கிராப்போ, தாமஸ் டியுபர் வில்லே, மைக்கேல் லீ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டோனி கன்சாலேஸ், ஜான் கெவின் எலிசி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மூத்த செனட் உறுப்பினர் ஜான் கார்னின் இந்தியா மற்றும் இந்திய – அமெரிக்கர்கள் குறித்த செனட் அமைப்பின் இணை நிறுவனர் மற்றும் இணைத் தலைவர் ஆவார்.

பரந்து விரிந்த மிகப்பெரும் ஜனத்தொகை சவால்களுக்கு இடையே கொவிட் நிலையை இந்தியா சிறப்பாக சமாளித்தது குறித்து நாடாளுமன்றக் குழு பாராட்டியது. நாட்டின் நாடாளுமன்ற பண்புகள் அடிப்படையிலான மக்கள் பங்களிப்பு, நூற்றாண்டுகளில் கண்டிராத கொடிய பெருந்தொற்றை சமாளிப்பதில் முக்கிய பங்காற்றியதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஜனநாயக மாண்புகளை பகிர்ந்து கொள்வதன் வாயிலாக இந்தியா – அமெரிக்கா ஒருங்கிணைந்த உலகப் பாதுகாப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துவதில், அமெரிக்க நாடாளுமன்றம் ஆக்கப்பூர்வமாக பங்காற்றியதுடன் தொடர்ந்து ஆதரவை அளித்து வருவது குறித்து பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார்.

தெற்காசியா மற்றும் இந்தோ பசிபிக் பிராந்தியம் தொடர்பான விஷயங்கள் உட்பட பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய விஷயங்கள் குறித்து வெளிப்படையான சிறந்த விவாதம் இந்தச் சந்திப்பின் போது நடைபெற்றது. இரண்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு நாடுகளுக்கு இடையிலான கூட்டு நலன் அதிகரித்து வருவதை பிரதமர் மற்றும் வருகை தந்துள்ள குழு சுட்டிக்காட்டியது. உலக அமைதி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்த விருப்பத்தை இருதரப்பும் தெரிவித்தது.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள், பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், முக்கிய தொழில்நுட்பங்களுக்கான நம்பகமான விநியோகச் சங்கிலிகள் போன்ற சமகால உலக விஷயங்கள் குறித்து பிரதமர் தமது கருத்தை பகிர்ந்து கொண்டார்.