ஹீரோ கதைத் திருட்டு உண்மை தான் – அதிர்ச்சி தரும் பாக்யராஜின் கடிதம்!

0

ஹீரோ கதைத் திருட்டு உண்மை தான் – அதிர்ச்சி தரும் பாக்யராஜின் கடிதம்!

“என் கதைக்கு உண்டான நியாயம் வழங்கக்கோரி 29. 10. 2019 தேதியில் ஒரு புகாரை நம் சங்கத்தில் தந்தீர்கள்”

“தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ், சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படத்தின் கதைத் திருட்டு உண்மை தான் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ஹீரோ’ திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார். கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், இவானா ஆகியோர் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஹீரோ படத்தின் கதை என்னுடையது என உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு பிரச்னையை கிளப்ப விஷயம் சிவகார்த்தி காதுக்கு சென்றுள்ளது. பிரச்னையை முடியுங்கள் என மித்ரனிடம் சிவகார்த்திகேயன் கறாராக சொல்ல, அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல், பிரச்னையை முடித்துவிட்டேன் என சில நண்பர்களின் மூலம் சிவகார்த்திகேயனுக்கு தெரியும் படி விஷயத்தை பரப்பியுள்ளார் இயக்குநர் மித்ரன். இதை தொடர்ந்து திரைப்படமும் கடந்த வாரம் வெளியானது.

இதனிடையே உதவி இயக்குநர் போஸ்கோ பிரபு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தை நாடியுள்ளார். இதுகுறித்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவரான பாக்யராஜ் எழுதியுள்ள கடிதத்தில்,

திரு போஸ்கோ பிரபு அவர்களுக்கு பணிவான வணக்கம். டைரக்டர் மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் டீஸர் மற்றும் விளம்பரங்களை பார்த்தேன். அந்த படத்தின் கதை நம் எழுத்தாளர்கள் சங்கத்தில் நான் 26. 4 .2017 தேதியில் பதிவு செய்து வைத்துள்ள அதே கதைதான் எனவே என் கதைக்கு உண்டான நியாயம் வழங்கக்கோரி 29. 10. 2019 தேதியில் ஒரு புகாரை நம் சங்கத்தில் தந்தீர்கள் அதன்படி….

நான் தங்களிடம் தங்கள் கதை சுருக்கத்தை கேட்டு வாங்கிக்கொண்டு டைரக்டர் மித்ரன் அவர்களிடம் ஹீரோ படத்தின் கதைச் சுருக்கத்தையும் எழுதி வாங்கிக்கொண்டு ஒப்பிட்டுப் பார்த்தோம். இந்த ஒப்பீடு பணியை நான் மட்டுமே அல்லாது நம் சங்கத்தின் முக்கிய செயற்குழு உறுப்பினர்கள் 18 பேரிடமும் தரப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. அந்த 18 உறுப்பினர்களும் பல இடங்கள் இயக்கிய. பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதிய . திறமைமிக்க அனுபவசாலிகள் அவர்கள் அனைவரும் படித்தபின் தங்கள் கதையும் டைரக்டர் மித்ரன் ஹீரோ கதையும் ஒன்றுதான் என ஒருவர் கூட கருத்து வேறுபாடின்றி ஒரே முடிவாக கூறினார்கள், எனது கருத்தும் அதே என்பதால்…

இதன் பிறகு மித்ரனை வரவழைத்து மொத்த உறுப்பினர்களும் என்ன கருதுகிறார்கள் என்று விவரத்தை கூறினேன். அவர் என் கருத்தை ஏற்றுக் கொள்ளாது, ஒப்பிட்டு படித்த 18 செயற்குழு உறுப்பினர்களுடன் அவரது விளக்கத்தை கூறவேண்டும் என்று கேட்டார். அதன்படி ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதிலும் அவர் கருத்தை யாரும் ஏற்க மறுத்து இரண்டு கதையும் ஒன்றுதான் என ஆணித்தரமாக தங்கள் கருத்தைக் கூறினார்கள். அதன் பின் அனைவரும் என்னிடம் தங்களுக்கு கதைக்கான பெயரும் இழப்பீட்டு தொகை பெற்று தர வலியுறுத்தினார்கள்.

சர்கார், கோமாளி படங்களுக்கு இதே பிரச்சினை வந்தபோது என்ன நியாயம் வழங்கப்பட்டதோ, அதையே இதிலும் தீர்ப்பாக வழங்க முடிவெடுத்து, மித்ரனுக்கு 22 .11. 2019 தேதியில் கடிதம் எழுதினேன். ஆனால் 20 நாட்களுக்கு மேலாகியும் டைரக்டர் மித்ரன் பொறுப்பான பதில் அளிக்காமல் படத்தின் வேலைகளை முடித்ததோடு நீதிமன்றத்தின் மூலம் தங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காது இருக்க உங்கள் மீது கேவியட் எடுத்து எங்களுக்கு அதன் பிரதி காப்பியை அனுப்பியிருந்தார்…. சங்கத்தை மதிக்காத அவர் எடுத்த இந்த நடவடிக்கை சங்கத்தின் நிர்வாக பொறுப்பாளர்கள் யாருக்கும் பிடிக்கவில்லை. சங்கத்திற்கு பெரிய அவமதிப்பாக நினைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதற்குள் படம் ரிலீஸ் ஆகி விட்டதால் நீதிமன்றத்தை அணுகி உங்கள் பக்கம் உள்ள நியாயத்தை கோரி நீதிக்கு போராட விரும்புவதாகத் தெரிவித்தீர்கள்.

நம் சங்கத்தின் 18 பேருக்கும் மேற்பட்டோர் இரண்டு கதையும் ஒன்றே என்பதை உறுதிப்படக் கூறியதை தலைவரான என் மூலம் இதை தங்களுக்கு சாட்சி கடிதமாகத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்க வாழ்த்துகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.