ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி

0

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூ.20 லட்சம் நிதி

அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர். இதற்காக தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் வழங்கி பெரும் சுமையை குறைத்துள்ளது.

இந்நிலையில், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கைக்கு நடிகர் கமல்ஹாசன் ரூபாய் 20 லட்சம் நிதி வழங்கி உள்ளார்.

இந்நிகழ்வில் பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் பங்கேற்றுப் பேசும் போது, “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை நிதிநல்கைக்காக ஓராண்டுக்கு முன் கமல்ஹாசன் உலகத்தமிழர் அனைவரும் நிதி நல்குமாறு குரல் கொடுத்தார். இன்று குரல் கொடுத்தால் மட்டும் போதாது. பொருள் கொடுக்க வேண்டும் எனக் கூறி ரூபாய் இருபது லட்சத்தை நிதிநல்கையாக வழங்கியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஊர் கூடித் தேர் இழுப்போம். தமிழிருக்கைக்குப் பொருள் கொடுப்போம் என்பது அவர் கருத்து” எனக் கூறினார்.

இந்நிகழ்வில் லண்டனைச் சேர்ந்த முனைவர் ஆறுமுகம் முருகையா, அமெரிக்காவைச் சேர்ந்த கால்டுவெல் வேல்நம்பி, எழுத்தாளர் சுகா போன்றோர் உடனிருந்தனர்.