ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் காவல் நீட்டிப்பு: என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு

ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் காவல் நீட்டிப்பு: என்.ஐ.ஏ. நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம்,

கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 5-ம் தேதி ஐக்கிய அரபு அமீரக தூதரக முகவரிக்கு வந்த சரக்குப் பெட்டிகளை சந்தேகத்தின் பேரில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து சோதனை செய்தனர். அப்போது தங்கக் கடத்தல் அம்பலத்துக்கு வந்தது. இந்த சோதனையில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் சிக்கியது.

இந்தக் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பி.எஸ். சரித், ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தில் பணியாற்றிவந்த ஸ்வப்னா சுரேஷ் அவரது நண்பர் சந்தீப் நாயர் ஆகிய 3 பேரும் தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்ஐஏ) காவலில் உள்ளனர். இந்த வழக்கில் துபாயைச் சேர்ந்த பைசல் பரீத் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவருக்கு எதிராக ஜாமீனில் வரமுடியாத கைது ஆணையை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதைத்தொடர்ந்து ஃபைசலுக்கு எதிராக நீல அறிவிப்பை (ப்ளூ கார்னர் நோட்டீஸ்) பிறப்பிக்குமாறு இன்டர்போலுக்கு என்ஐஏ கோரிக்கை விடுத்துள்ளது.

ஜூலை 18ம் தேதி தேசிய விசாரணை முகமை அதிகாரிகள் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரையும் அவர்களது இல்லங்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு ஆதாரங்களை திரட்டுவதற்காக அழைத்துச் சென்றது. சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளது என்.ஐ.ஏ., இதன் பின்னணியில் பயங்கரவாத நிதியுதவி இருக்கலாம் என்ற கோணத்தில் வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டது.

இதே வழக்கில் இன்னொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான பிஎஸ் சரித் என்பவரை ஜூலை 17ம் தேதி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதித்தது. ஜூலை 6ம் தேதி இவர் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இவர் திருவனந்தபுர விமான நிலையத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை தூதரக அலுவலகத்தில் பொதுத்தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றியவர்.

இந்நிலையில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரின் காவலை ஜூலை 24ம் தேதி வரை நீட்டித்து சிறப்பு என்.ஐ.ஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.