வைகுண்ட ஏகாதசி விரத மகிமை

0

வைகுண்ட ஏகாதசி விரத மகிமை

காயத்ரி மந்திரத்துக்கு நிகரான மந்திரம் இல்லை…
தாய்க்கு சமமான தெய்வம் இல்லை
காசியை விட சிறந்த தீர்த்தம் இல்லை
ஏகாதசிக்கு நிகரான விரதம் இல்லை

மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாகக் கொண்டாட ஏற்பாடு செய்தார். ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் தினம் என்று பொருள். ஞானேந்திரியங்கள் ஐந்து. கர்மேந்திரியங்கள் (வாக்கு, பாதம், பாணி, பாயு, உபத்தம்) ஐந்து. மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

“ஏகாதசி என்றால் தமிழில் பதினொன்று எனப்பொருள்படும் . ஏகாதசி அன்று விரதம் மேற்கொள்வதை அனைத்து சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன”. மற்ற விரதங்களைவிட ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிக சிறப்பானதாகும் ,

வருடத்துக்கு 24 (அ) 25 ஏகாதசிகள் வரும். அனைத்து ஏகாதசி களிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர் என்பது நம்பிக்கை. வருடம்முழுதும் ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் வரும் வைகுண்ட ஏகாதசியில் மட்டு மாவது விரதம் இருப்பது சிறப்பான பலனை தரும். மூன்றுகோடி ஏகாதசிகளில் விரதமிருந்த பலனை தர கூடியது என்பதால் வைகுண்ட ஏகாதசி ‘முக்கோடி ஏகாதசி’ என்வும் அழைக்கப்படுகிறது. தீட்டு காலத்தில்கூட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று தான், அர்ஜுனனுக்குக் கீதையை உபதேசம்செய்தார் கிருஷ்ண பரமாத்மா.எனவே இந்தநாளை, “கீதா ஜயந்தி’ என கொண்டாடுகின்றனர்.

ஏகாதசி விரதத்தின்போது எக்காரணத்தை கொண்டும் துளசி பறிக்ககூடாது. பூஜைக்கான துளசியை முதல் நாளே பறித்துவிட வேண்டும்.

ஏகாதசி விரதத்தின் மகிமை

இராவணனின் கொடுமைகளை சகிக்கமுடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழிமாத சுக்லபக்ஷ (வளர்பிறை) ஏகாதசி யன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர். பகவானும் பிரம்மதேவர்களுக்கு தரிசனமளித்து அவர்களை காத்தருளினார். முக்கோடி தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசி முக்கோடி ஏகாதசி எனவும் அழைக்கபடுகிறது .

திருமாலின் அவதாரமான ஸ்ரீ ராமனே பங்குனி மாதத்தில் விஜயா என்ற ஏகாதசி விரதத்தை இருந்து பின் கடலைகடந்து சென்று தசக்ரீவனை அழித்து இலங்கையைவென்றார் என புராணம் தெரிவிக்கின்றது. இந்தயோசனையை அவருக்கு பக்தாப்யர் என்ற முனிவர் கூறினார். இந்த ஏகாதசி விரதம் கோரிய பலன்களை தட்டாமல் தரும் . மேலும் சீதா தேவியின் அருளையும் பெறலாம்.

ஒருவருடம் முழுவதும் ஏகாதசிவிரதம் இருந்து, துவாதசிப்பாரணை முடித்த அம்பரீஷ மஹா ராஜாவை தவத்தில் சிறந்த துர்வாச முனிவராலும் ஒன்றும் செய்ய முடிய வில்லை, அம்பரீஷ மஹாராஜாவை திருமாலின் சுதர்சன சக்கரம் காத்தது என பாகவத புராணம் தெரிவிக்கின்றது.

திருக்குறுங் குடி எனும் தலத்தில் பாணர் குலத்தைசேர்ந்த நம்பாடுவான் ஏகாதசியன்று எம்பெருமானை பாடி தானும் உயர்வுபெற்றதோடு தன்னை அழிக்கவந்த பிரம்மராக்ஷனுக்கும் சாப விமோசனத்தை அளித்ததை கைசிக புராணம் தெரிவிக்கின்றது.

ருக்மாங்கதன் எனும் மாமன்னன் இந்தவிரதத்தை தானும் கடைப்பிடித்து தன்நாட்டவரும் பின்பற்றுமாறு செய்ததால் அவன் பெற்றபெரும் பயனை ருக்மாங்கத சரித்திரம் தெரிவிக்கின்றது.

பீமன் ஒர் ஆண்டுமுழுவதும் இந்தவிரதத்தை செய்யமுடியாத நிலையில் ஆனி மாத சுக்ல பக்ஷ ஏகாதசியாகிய நிர்ஜலா எனும் விரதத்தை மட்டுமே நிறைவேற்றி ஓர் ஆண்டின் முழுபயனையும் பெற்றதாக பத்மபுராணம் தெரிவிக்கின்றது.
பாற்கடலில் மந்தார மலையை மத்தாகவும், வாசுகியை கயிறாகவும்கொண்டு எம்பெருமான் அமுதத்தை கடைந்து எடுத்த ஒப்பற்ற நாள் வைகுண்ட ஏகாதசி ஆகும். குருக்ஷேத்திர போரில் பார்த்தனுக்கு கீதையை உபதேசித்த நாள் இந்தநாள்தான் என்பது குறிப்பிடத்தக்கது .

ஏகாதசி அன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலிசெய்பவன்,அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிக கீழான நரகத்திற்குசெல்வான்.

திருவரங்கத்தில்(ஸ்ரீரங்கம்)

தமிழ்நாட்டில் அமைந்துள்ள வைணவத்தலங்களில் முதன்மையாகக் கருதப்படுகின்ற திருவரங்கத்தில் உள்ள அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பகல்பத்து, இராப்பத்து என்று இரு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருநாளும் திருமால் வெவ்வேறு அலங்காரங்களில் வெவ்வேறு வாகனங்களில் உலா வருகிறார். ஏகாதசி நாளன்று இரத்தினங்களால் வேய்ந்த ரத்னாங்கி உடையில் கருவறையிலிருந்து வெளிவந்து ஆயிரங்கால் மண்டபத்தில் வீற்றிருக்க வடக்கு வாயில் (“பரம்பத வாசல்”, சொர்க்க வாசல்”) வழியே உலா வருவதைக் காண பெருந்திரளான பக்தர் கூட்டம் கூடும். இந்த வாயில் இந்த நாளிலே மட்டுமே திறக்கப்படும்.
திருவரங்கம் கோவிலில் இந்நாளின் முந்தைய பத்து நாட்களில் “இராப்பத்து” என்றும் பிந்தைய பத்து நாட்களில் “பகல்பத்து” என்றும் சிறப்பாக விழா நடத்தப்படுகிறது.
திருமலையில்(திருப்பதி, ஆந்திரா)

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி மலைமீதுள்ள திருமலையிலும் இத்தகைய விழா கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சிறப்பு வாயில் “வைகுண்ட துவாரம்” என அழைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி நாளில் மட்டுமே திறக்கப்படும் இவ்வாயில் வழியே சென்று வழிபடுவோர் வீடுபேறு பெறுவர்.எனவே இத்திருநாளில் பெருந்திரளான பக்தர்களும் உயர்நிலையாளர்களும் திரள்கின்றனர்