வேளச்சேரியில் நடைபெறும் மீட்புப் பணிகள் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேளச்சேரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நடைபெற்று வரும் மீட்புப் பணிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
நேற்று பெய்த கனமழையின் காரணமாக தென் சென்னை பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வேளச்சேரி, மடிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் 43 செ.மீ. மழைப்பொழிவு பதிவான நிலையில், அங்கு அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த சூழலில் வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில், பைபர் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்குள்ள மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.