வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை!

0
1470

visaranai-oscar-letter‘அட்டக்கத்தி’ தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘விசாரணை’. இப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்திருந்தனர. லைக்கா நிறுவனம் இப்படத்தை வெளியிட்டது. ‘லாக்கப்’ என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இப்படம் வெனிஸ் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளை வாங்கி குவித்துள்ளது. வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் இந்த படம் பெற்றது. மேலும், சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங், சிறந்த துணை நடிகர் என 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், ‘விசாரணை’ படம் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்திய திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா, இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான ஆஸ்கார் விருது பிரிவு போட்டிக்கு இந்தியாவில் இருந்து ‘விசாரணை’ படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த பரிந்துரையில் மொத்தம் 29 இந்திய படங்கள் இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து ‘விசாரணை’ படத்தை மட்டும் தேர்வு குழுவினர் ஆஸ்கார் விருது போட்டிக்கு பரிந்துரை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பாக தமிழ் படங்களில் இருந்து ‘ஹேராம்’ திரைப்படம்தான் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து ஒரு தமிழ் படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.