‘வீட்டில் தயாராகும் பல அடுக்கு மாஸ்க் சிறந்தது’ : ஆஸ்திரேலியா ஆய்வில் தகவல்

0
134

‘வீட்டில் தயாராகும் பல அடுக்கு மாஸ்க் சிறந்தது’ : ஆஸ்திரேலியா ஆய்வில் தகவல்

சிட்னி: கொரோனா வைரஸ் தொற்று உமிழ்நீர் மூலம் பரவுவதை தடுப்பதில், வீட்டில் துணியால் தயாரிக்கப்படும் பல அடுக்கு முகக்கவசமே சிறந்தது என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஓரடுக்கு மற்றும் ஈரடுக்கு துணியால் ஆன முகக்கவசத்துடன், சர்ஜிக்கல் முகக்கவசத்தின் செயல்திறனை ஒப்பிட்டு சோதனை செய்தனர். எல்.இ.டி லைட்டிங் அமைப்பு மற்றும் விரைவாக காட்சிகளை படம்பிடிக்கும் கேமராவை பயன்படுத்தி நடத்திய சோதனையில், ஓரடுக்கு முகக்கவசத்தை விட ஈரடுக்கு முகக்கவசம் அணிந்து பேசும் போது குறைந்த உமிழ் நீர்த்துளிகள் பரவுவதை கண்டறிந்தனர்.

இருமல் மற்றும் தும்முவதால் ஏற்படும் உமிழ்நீர்த்துளி பரவலைக் குறைப்பதில் ஈரடுக்கு கணிசமாக சிறந்தது. அனைத்து சோதனைகளிலும், மூன்றடுக்கு அறுவை சிகிச்சை முகக்கவசம் சிறந்தது என சிட்னி நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ரெய்னா மேக்கிண்டயர் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் தோராக்ஸ் இதழில் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

முகக்கவசம் ஆரோக்கியமான மக்களை கொரோனா தொற்று நீர்த்துளிகளை உள்ளிழுப்பதில் இருந்து பாதுகாப்பதோடு, ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பரவுவதைக் குறைக்கும் என்று கருதப்படுகிறது. உலகளாவிய மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், அறுவை சிகிச்சை முகக்கவசங்களுக்கு மாற்றாக வீட்டில் துணியால் ஆன முகக்கவசங்களை அணியுமாறு பரிந்துரைக்க வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.