‘விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாகவே இருக்கக் கூடாது’ : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

0
69

‘விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாகவே இருக்கக் கூடாது’ : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (7.1.2025) சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறையின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சர்வதேச, ஆசிய மற்றும் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 1,021 வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை காசோலைகளை வழங்கிய நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற ஆயிரத்து 21 வீரர், வீராங்கனைகளுக்கு, ரூபாய் 26 கோடியே 69 லட்சம் அளவிற்கு இன்றைக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம், பெருமை அடைகின்றோம். மேலும், மொத்தம் ரூபாய் 30 கோடி மதிப்பீட்டில் திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்கவும், ரூபாய் 43 கோடி மதிப்பீட்டில் இராமநாதபுரத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒலிம்பிக் நீர் விளையாட்டு அகாடமி ஏற்படுத்தவும், ரூபாய் 50 கோடி மதிப்பீட்டில், திருச்சி இலந்தைப்பட்டியில் ஒலிம்பிக் அகாடமி அமைக்க இன்றைக்கு அடிக்கல் நாட்டியிருக்கின்றோம்.

அதே போல, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய பாரா விளையாட்டு அரங்கம் அமைக்கவும் இன்றைக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மேலும் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில், புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய உள் விளையாட்டு அரங்கினையும் இன்றைக்கு உங்கள் முன்பு திறந்து வைத்திருக்கின்றோம்.

இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான விளையாட்டு சாதனையாளர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். குறிப்பாக, இங்கே அர்ஜுனா விருதுக்கு தேர்வாகியுள்ள பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ள தங்கை துளசிமதி முருகேசன் அவர்களும் வந்திருக்கிறார்கள். அதேபோல, டேபிள் டென்னிஸ் விளையாட்டில் சர்வதேச மற்றும் தேசிய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்ற தம்பி சத்யன் அவர்களும் வருகை தந்திருக்கின்றார். அவரும் அர்ஜுனா விருது பெற்றவர்.

இவர்களைப் போல இங்கே ஏராளமான ஒலிம்பியன்ஸ் சர்வதேச அளவிலான வீரர்கள் வந்திருக்கின்றனர். சாதாரணமான ஒரு பின்புலத்திலிருந்து புறப்பட்டு இன்றைக்கு ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்ற உங்கள் அத்தனை பேருக்கும் எங்களுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

அதேபோல, என் மனதிற்கு எப்போதும் நெருக்கமான SDAT விடுதி மாணவர்கள் வந்திருக்கின்றீர்கள். உங்களுக்கு இந்த இரண்டு பேரும், வந்திருக்கின்ற அத்தனை விளையாட்டு வீரர்களும் ஒரு இன்ஸ்பிரேஸனாக நிச்சயமாக இருப்பார்கள் என்று நம்புகின்றோம். உங்களுக்கும் எங்களுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

உங்கள் எல்லாருக்கும் தெரியும். சிறிது காலத்துக்கு முன்னால் வரைக்கும், குறிப்பிட்ட சில விளையாட்டு வீரர்களை தவிர, பல விளையாட்டு வீரர்கள் வறுமையில் இருக்கிறார்கள், வாடுகிறார்கள் என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, அந்த நிலை முற்றிலும் மாற்றப்பட்டுள்ளது. கழக அரசு ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு இதுவரை பல்வேறு போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 4 ஆயிரத்து 352 வீரர்களுக்கு, ரூபாய் 143 கோடியே 85 லட்சம் அளவிற்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

விளையாட்டுத் துறைக்கு அமைச்சராக நான் பொறுப்பேற்ற போது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுடைய துறைக்கு ஒரு கட்டளையை பிறப்பித்தார்கள்.

“விளையாட்டுப் போட்டிகளில் சாதனைப் படைக்கும் வீரர்களின் குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன என்ற அந்த செய்தி இனி வரவே கூடாது” என்று கட்டளையிட்டார்கள். அதன்படி செயல்பட எங்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அந்த உறுதியோடு தான் நம்முடைய அரசு, நம்முடைய துறை செயல்பட்டு வருகின்றது. அதற்கு, ஒரு சிறிய உதாரணம் தான் இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி. பொருளாதாரத்தை விட உங்களின் திறமையே பெரிது.

பொருளாதாரம் உங்கள் திறமைக்கு தடையாக நிற்கக் கூடாது என்று முதன்முறையாக தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை (Tamil Nadu Champions Foundation) என்ற திட்டத்தை நாங்கள் செயல்படுத்தினோம். அந்தத் திட்டத்தின் மூலம், 113 பதக்கங்களை வென்ற 594 வீரர்களுக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் 11 கோடியே 38 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் அளவில் நிதி உதவி வழங்கியுள்ளோம்.

சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க எந்த விளையாட்டு வீரருக்கும், பொருளாதாரம் ஒரு தடையாகவே இருக்கக் கூடாது என்பதில் நம்முடைய திராவிட மாடல் அரசு மிகவும் தெளிவாக இருக்கின்றது. அந்த அளவிற்கு விளையாட்டுத் துறையை முன்னே எடுத்துச் செல்ல, தமிழ்நாடு அரசு எல்லாவித முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

சமீபத்தில் கூட, இங்கே குறிப்பிட்டதை போல விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குகின்ற வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பணி வாய்ப்பினை வழங்கும் விதமாக நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் 84 வீரர்களுக்கு (Job appointment letter) பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்கள். ஆகவே, இன்றைக்கு உங்களுக்கு உயரிய ஊக்கத் தொகையை வழங்குகின்றோம், வேலைக்காக விண்ணப்பித்திருந்தால், அதன் மீது பரிசீலனை செய்து நம்முடைய அரசு வீரர்களுக்கு வேலையையும் நிச்சயம் தரும் என்பதை இங்கே நான் தெரிவித்துக் கொள்கின்றேன். உலகப் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டில் இருந்து உருவாக வேண்டும் என்பது தான் இந்த அரசினுடைய ஒரே நோக்கம்.

விளையாட்டு எவ்வளவு சக்தி வாய்ந்தது, மரியாதைக்குரியது என்பதற்கு இங்கே ஒரு சிறிய எடுத்துக்காட்டை இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975-ஆம் ஆண்டு காலகட்டத்தில், உலகின் மிகச் சிறந்த கால்பந்தாட்ட (football) வீரராக திகழ்ந்த பீலே. அப்போதையே அமெரிக்க அதிபர் ஜெராட் Ford, திரு.பீலேவை சிறப்பு விருந்தினராக (Chief Guest-ஆக) அவரை கௌரவப்படுத்துவதற்காக வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் சிறப்பு செய்கின்றார். அப்போது நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

Ford-ம் – பீலேவும் பேசிக் கொண்டிருக்கும் போது, அங்கு இருக்கக்கூடிய ஒரு சிறுவன் ஒரு Autograph புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவர்களை நோக்கி வேகமாக ஓடி வருகின்றான். அவன் தன்னுடைய கையில் இருந்த Autograph புத்தகத்தை அமெரிக்க அதிபர் Ford-இடம் நீட்டுவான் என்று அங்கு இருந்த அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். ஆனால், அந்த சிறுவன் ஆட்டோகிராப் புத்தகத்தை football வீரர் பீலேவிடம் நீட்டினான். இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.

வல்லரசு நாடாக இருக்கும் அமெரிக்காவுடைய அதிபரின் autograph-ஐ விட, பிரேசிலில் வறுமையான குடும்பத்தில் பிறந்து ஒரு football வாங்கக் கூட காசு இல்லாத நிலையில் விளையாடத் தொடங்கி, Football என்றாலே பீலே தான் என சொல்லும் அளவுக்கு உயர்ந்த பீலேவின் கையெழுத்து தான் அந்த சிறுவனுக்கு பெரியதாக இருந்தது.

அது தான் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் சிறப்பு, உங்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய அந்த புகழ். அந்த மாதிரியான சிறப்பை தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பெற வேண்டும் என்று நாங்கள் முயற்சிக்கின்றோம். அந்த லட்சியத்தை நோக்கி நீங்கள் உழைக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். விளையாட்டைப் பொறுத்தவரை, உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், நம்முடைய திராவிட மாடல் அரசும் என்றென்றும் தயாராக இருக்கின்றது.

நீங்கள் செய்ய வேண்டியது இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் தான். ஒன்று, உங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்வது. இரண்டு, உங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை என்பதை நம்முடைய அரசுக்கு தெரியப்படுத்துவது. முதலாவது உங்களுடைய கைகளில் இருக்கிறது. இரண்டாவது, எங்களுடைய கைகளில் இருக்கிறது.

இந்த உலகத்தில் எந்த மூலையில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தாலும், தமிழ்நாட்டு திறமையாளர்களை அதில் கலந்துகொள்ள வைப்பது, எங்கள் கடமை என்பதை மட்டும் உங்களுக்கு இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இங்கே தங்கை துளசிமதி முருகேசன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார். படிப்பு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு விளையாட்டு முக்கியம். நன்றாக படிக்கின்ற பிள்ளைகள் நன்றாக விளையாடும், நன்றாக விளையாடுகின்ற பிள்ளைகள் நன்றாக படிக்கும். அதற்காகதான் நம்முடைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களை நான் கையோடு அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன். ஏனென்றால், அவர் நினைத்தால்தான் மாணவர்கள் பள்ளிக் கூடத்தில் விளையாட முடியும்.