‘விளையாட்டு என்பது வெறும் போட்டியில்லை!’: ‘முதலமைச்சர் கோப்பை’ நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

0
221

‘விளையாட்டு என்பது வெறும் போட்டியில்லை!’: ‘முதலமைச்சர் கோப்பை’ நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

தமிழ்நாட்டு வீரர்களை உலக அளவில் கொண்டு செல்லும் முயற்சியாக, ஆண்டுதோறும் ‘முதலமைச்சர் கோப்பை’ விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல அளவில் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் 4 ஆம் நாள் முதல் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று (அக்டோபர் 24) நிறைவடைந்துள்ளது.

இதற்கான நிறைவு விழா, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக முன்னெடுக்கப்பட்டு, சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அவர் தெரிவித்ததாவது, “தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறையை சிறப்பாக கவனித்து, இந்தியாவே உற்றுநோக்கும் துறையாக மாற்றிக்காட்டியிருக்கிறார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இதனால், துறையும் வளர்ந்திருக்கிறது, அவரும் அமைச்சரிலிருந்து, துணை முதலமைச்சராக வளர்ந்திருக்கிறார்.

திராவிட மாடல் ஆட்சிக்கு பின், விளையாட்டை பொழுதுபோக்காக பார்க்கும் எண்ணத்தை மாற்றி, விளையாட்டை இளைஞர்கள் தேர்ந்தேடுக்கும் அளவிற்கு, விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாட்டில் ரூ. 114.39 கோடி செலவில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தியது தான், திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் தருவதற்கு எடுத்துக்காட்டு.

44ஆவது செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் WTA 2022, சுகுவாஷ் உலககோப்பை 2023, சென்னை செஸ் கிராண்ட்மாஸ்டர் 2023 உள்ளிட்ட ஏராளமான சர்வதேச போட்டிகளை அனைவரும் பாராட்டும்படி நடத்தியிருக்கிறோம்.

விளையாட்டு வீரர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும், ‘தி இந்து’ ஸ்போர்ட்ஸ்டார் விருது 2023 நிகழ்ச்சியில், விளையாட்டை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாக ‘தமிழ்நாடு’ தேர்வு செய்யப்பட்டு, பாராட்டு பெற்றோம்.

தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகையை ரூ. 25 லட்சத்திலிருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தியதோடு, பயனாளிகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

மேலும், சர்வதேச அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு, பண உதவி ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ. 12 லட்சமாக உயர்வு.

தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற 20 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான ஆண்டு நிதி ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 4 லட்சமாக உயர்வு.

இவை தவிர, சீருடை, விளையாட்டு உபகரணங்கள், வெள்நாடுகளில் விளையாட்டு பயிற்சி உள்ளிட்டவைகளுக்காக நிதி உதவி! என விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்கிறது.

இந்நிகழ்வை பார்த்துகொண்டிருக்கும் பெற்றோர்களே, விளையாட்டு என்பது வெறும் போட்டியில்லை. அது உடல் வலிமையும், மன வலிமையும் தரக்கூடியது. குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்தால், ஊக்கப்படுத்த வேண்டும். நாம் கொடுக்கும் ஊக்கமே, குழந்தைகளுக்கு பாதி வெற்றி” என்றார்.