விரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை! அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு

0

விரைவில் ஆன்லைனில் மட்டுமே சினிமா டிக்கெட் விற்பனை! அமைச்சர் கடம்பூர் ராஜூ அறிவிப்பு

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த பல விதிமுறைகளை வகுத்து உள்ளோம்.

தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் இனி ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை திட்டம் விரைவில் அமலுக்கு வர இருப்பதாக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘எது கேலிக் கூத்து என்பது மக்களுக்கு தெரியும். மு க ஸ்டாலின் வெளிநாடு சென்றதைத் தான் மக்கள் கேலிக்கூத்தாக நினைக்கின்றனர்.

முதல்வர் பயணம் திட்டமிட்டு வெளிப்படையாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நிறுவங்களை ஆய்வு செய்துள்ளார், என்ன ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது வெளிப்படையாக ஊடகங்களுக்கு கொடுக்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் பல முறை வெளிநாடு சென்றிருக்கிறார். இதுபற்றி என்றைக்காவது ஊடகத்தில் செய்திகள் வந்திருக்கிறதா? எதற்காக வெளிநாடு சென்றார் என்று அவர்தான் வெள்ளை அறிக்கை விட வேண்டும். அதுபற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. எதிர்க்கட்சித் தலைவரும் அரசின் ஒரு பங்கு தான். அவரைக் கேள்வி கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. நாகரீகம் கருதி அதை நாங்கள் கேட்கவில்லை.

லண்டனில் உள்ள தமிழர்கள், தொழில் நிறுவனங்கள், அங்கு உள்ள மருத்துவமனை நிர்வாகிகளை முதல்வர் சந்தித்தார். அங்கு உள்ளது போல மருத்துவமனை ஏர் ஆம்புலன்ஸ் வசதியை விரைவில் தமிழகத்தில் ஏற்படுத்தி, வெளிநாட்டுக்கு இணையான மருத்துவ வசதி கொண்டு வர வேண்டுமென்று முயற்சி எடுத்துள்ளார். இது எல்லாம் வெளிப்படையாகத் தான் நடக்கிறது. இதில் என்ன மர்மம் இருக்கிறது என்பது தெரியவில்லை.

எதையெடுத்தாலும் அரசியல் செய்வதன் மூலம் மு க ஸ்டாலின் முகத்திரை மக்களிடம் வெளிப்பட்டுள்ளது. மக்கள் அதை விரும்பவில்லை. அ.ம.மு.கவில் புதியதாக மாவட்டச் செயலாளர்களை டி.டி.வி தினகரன் நியமிக்கவில்லை. அங்கிருந்து சென்ற அவருக்கு பதிலாக காலி இடத்தினை நிரப்பியிருக்கிறார்.

அங்கிருந்து வந்தவர்கள் தாய் கழகமான அ.தி.மு.கவில் இணைந்து விட்டனர். ஆகையால் காலி இடத்தை நிரப்பும் பணியை அவர் செய்துள்ளார். அங்கே இயக்கம் இருப்பது போன்று காட்ட வேண்டும். அதற்காக நடவடிக்கை எடுத்துள்ளார்.

அ.ம.மு.கவை நாங்கள் ஒரு இயக்கமாகவே, எங்களுக்கு போட்டியாகவோ நினைக்கவில்லை. 47 ஆண்டுகால அ.தி.மு.க அரசியல் வரலாற்றில் பிரிந்தவர்கள் பின்னர் இணைந்ததாக தான் வரலாறு. உண்டு, பிரிந்தவர்கள் நீடித்ததாக வரலாறு இல்லை. டி.டி.வி.தினகரன் பற்றி பேசி எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை.

திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த பல விதிமுறைகளை வகுத்து உள்ளோம். திரையரங்கு கட்டணங்களை ஒழுங்குபடுத்தி உள்ளோம். திரையரங்கில் பார்க்கிங் கட்டணமும் வரைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, சில குறிப்பிட்ட திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் மூலம் ஒரு நாளைக்கு ஒரு காட்சிக்கு எவ்வளவு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது என்பது ஆய்வு செய்யப்படுகிறது.

விரைவில் ஆன்லைன் மூலம் மட்டுமே தமிழகம் முழுவதும் சினிமா டிக்கெட் முன்பதிவு செய்யும் முறை நடைமுறைக்கு வர உள்ளது. திரையரங்கில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரமும் ஆய்வு செய்யப்படுகிறது. அதேபோன்று கட்டணமும் விரைவில் அமல்படுத்தப்படும். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் ஒன்று இரண்டு பணிகளை தவிர அனைத்தும் நிறைவேற்றப்பட்டு உள்ளது’ என்று தெரிவித்தார்.