விமான ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா நோயாளிக்கு கரம் கொடுத்த சோனு சூட்!

0
11

விமான ஆம்புலன்ஸ் மூலம் கொரோனா நோயாளிக்கு கரம் கொடுத்த சோனு சூட்!

படுக்கை வசதி கிடைக்காமல் அவதிப்பட்ட கொரோனா நோயாளியை, விமான ஆம்புலன்ஸ் மூலம் படுக்கை வசதியிருக்கும் மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்ய உதவியிருக்கிறார் நடிகர் சோனு சூட்.

நடிகர் சோனு சூட், கொரோனா காலத்தில் செய்து வரும் பல உதவிகள், சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கின்றன. அப்படி அவர் சமீபத்தில் செய்த உதவியும், இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது. அந்த உதவி என்னவெனில், படுக்கை வசதி மற்றும் வெண்டிலேட்டர் கிடைக்காமல், மிக தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நாக்பூரை சேர்ந்த 25 வயது கைலாஷ் அகர்வால் என்ற பெண்ணை, கொரோனா சிகிச்சைக்காக நாக்பூரிலிருந்து ஐதராபாத் தனியார் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து வர உதவியிருக்கிறார்.

கைலாஷ் அகர்வால் முன்பு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த மருத்துவமனையில், வேறு பெரிய மருத்துவமனைக்கு அவரை அழைத்து செல்லுமாறு மருத்துவர்களே கூறியிருக்கின்றனர். மேற்கொண்டு சிகிச்சையளிக்காமல் கைவிட்டிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, அப்பெண்ணின் குடும்பத்தினர், அப்பகுதி எம்.எல்.ஏ. மூலமாக வேறு மருத்துவமனைகளில் விசாரித்திருக்கின்றனர். அப்போதும் உதவி கிடைக்காததால், சமூக வலைதளத்தை நாடியிருக்கின்றனர்.

அப்படி ட்விட்டரின் இதுபற்றி பதிவுசெய்தபோது, அதை பார்த்த நடிகர் சோனு சூட், உடனடியாக வெண்டிலேட்டர் வசதியுடன் இருக்கும் அவசர சிகிச்சை பிரிவுடன் இருக்கும் ஐதராபாத் தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதிக்கும் முயற்சியை தொடங்கியிருக்கிறார்.

இந்த உதவிகுறித்து பத்திரிகைகளுக்கு பேசியிருக்கும் சோனு சூட், “விமான ஆம்புலன்ஸூக்கு நோயாளியை மாற்றுவதில் தொடக்கத்தில் சில சிக்கல்கள் இருந்தன. முக்கியமாக அந்நோயாளி சிகிச்சை எடுத்து வந்த பகுதியில் விமான நிலையம் இல்லை. அதனால் அருகிலுள்ள வேறொரு இடத்துக்கு அவரை அழைத்து வர வேண்டியிருந்தது. அதற்காக மருத்துவமனை தரப்பிலும், உள்ளூர் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டிடமும் அனுமதி பெற்றோம். தொடர்ந்து உடனடியாக மருத்துவக் குழுவினர் விரைந்து செயல்பட்டு, அப்பெண்ணை விமான நிலையத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வந்துவிட்டனர். இப்போது அவருக்கு சிகிச்சை நடந்துக்கொண்டிருக்கிறது. விரைவில் குணமடைவார் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.