விபத்து, புற்றுநோய்க்காக மதுரையில் எலும்பு வங்கி தொடக்கம்: தமிழ்நாடு அரசுக்கு குவியும் பாராட்டு!

0
70

விபத்து, புற்றுநோய்க்காக மதுரையில் எலும்பு வங்கி தொடக்கம்: தமிழ்நாடு அரசுக்கு குவியும் பாராட்டு!

வாகன விபத்துகளில் கை, கால்களில் முறிவு ஏற்படுவோருக்கும், எலும்பு புற்றுநோய் மற்றும் பல்வேறு வகை கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்ட எலும்புகளை மாற்றுவதற்குத் தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் அரசு மருத்துவமனைகளில் எலும்பு வங்கி செயல்பட்டு வருகிறது.

தென் தமிழகத்தில் எலும்பு வங்கி இல்லாததால் எலும்பு முறிவு மற்றும் எலும்பு நோயால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் இதுபோன்ற வங்கி வசதி இல்லை.

இதையடுத்து எலும்பு வங்கி அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக பல்வேறு கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. பின்னர், 2017ம் ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் எலும்பு வங்கி அமைக்கச் சென்னை மருத்துவக் கல்வி இயக்குநரகம் அனுமதி வழங்கியது.

ஆனால், கடந்த அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் இதற்கான பணிகள் நடைபெறாமல் இருந்து. இதையடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் கடந்த செப்டம்பர் மாதம் எலும்பு வங்கி அமைப்பதற்கான பணிகள் துவங்கியது.

இதையடுத்து எலும்பு வங்கிக்கான பணிகள் முழுமையாக முடிவடைந்ததை அடுத்து இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்துவைத்து பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார். இந்த வங்கி மூலம் இனி தென்தமிழக மக்கள் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லாமல் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சைப்பெற முடியும்.