விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு பூஜை!

0

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதனால் அதிகாலை முதலே கோவில்களில் திரண்ட பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

விநாயாகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உலக புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர்.

சேலத்தில் உள்ள பிரசித்திபெற்ற ராஜகணபதி திருக்கோவிலில் சுவாமி விநாயகர் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது. இதில் சுவாமிக்கு பால், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்ப்பட்டு, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில், அதிகாலை 4 மணிக்கே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் நின்று சுவாமி விநயாகர் பெருமானை, குடுபத்துடன் வழிப்பட்டனர்.

புகழ்பெற்ற திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், பச்சரிசி, நெய், வெல்லம் உள்ளிட்டவைகளால் கொண்டு 150 கிலோ எடையுள்ள கொழுக்கட்டைகள் சுவாமிக்கு படைக்கப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு கொழுக்கட்டைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.