விடுமுறை நாட்களில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி: பொய் தகவல் பரப்புவோருக்கு அமைச்சர் எச்சரிக்கை!
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசுப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பில், “மெய்யறிவுக் கொண்டாட்டம்” என்ற வினாடி வினா நிகழ்ச்சி சென்னையில் தொடங்கி உள்ளது. இன்று முதல் வரும் ஏப்ரல் 8 வரை ஒருவார காலம் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க நிகழ்வு, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்றது.
இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் மற்றும் மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு தேர்வாகி உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு முழுவதும் இருந்து 152 பேர் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டுள்ள இந்த “மெய்யறிவு கொண்டாட்டம்” நிகழ்ச்சி, வினாடி வினா மட்டுமின்றி, சட்டமன்ற நிகழ்வுகள், அருங்காட்சியகம் உள்ளிட்டவைகளை பார்வையிடுவதையும் உள்ளடக்கி அமைந்துள்ளது.
விழா மேடையில் மாணவர்களை வாழ்த்திப் பேசிய அமைச்சர், “தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். மாதம் ஒரு புதிய திட்டம் என்கிற அளவுக்கு பள்ளிக் கல்வித்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அப்படி தொடங்கப்படும் திட்டங்கள் ஒவ்வொன்றும், முழுமை பெறுவதையும் உறுதி செய்து வருகிறோம். இத்தகைய வாய்ப்புகளை நம்முடைய மாணவர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “மாநில அளவில் நடத்தப்படும் வினாடி வினா போட்டியில் தேர்வாகும் 25 அரசுப்பள்ளி மாணவர்கள் இந்த ஆண்டும் வெளிநாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்ட உள்ளனர்.
பள்ளிக்கல்வித் துறையில் இருந்து மாணவர்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளோம். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படவில்லை என்பது தவறான தகவல், உரிய முறையில் நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான பணிகள் பல்வேறு கல்வியாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. வரும் ஜூன் மாதம் அதற்கான அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்த பின்னர், அதன் விவரங்கள் வெளியிடப்படும்.
கோடை வெயில் காரணமாக 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களின் பொதுத் தேர்வை முன்கூட்டியே நடத்துவது குறித்து ஆலோசனை செய்த பின்னரே முடிவு எடுக்கப்படும். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை முழுவதுமாக தேர்வு எழுத வைக்க கடந்தமுறை நடைபெற்ற முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்வு எதிர்கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டில் தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா காலகட்டத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் வருகைப்பதிவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஆனால் 75 சதவீதம் வருகைப்பதிவு உள்ள மாணவர்களுக்கு மட்டுமே ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்ற நடைமுறை வரும் கல்வியாண்டு முதல் கடைபிடிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.