விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான ரூ.6000 கோடி சொத்துகள் பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை முடிவு

0

வங்கிக் கடன் மோசடி விவகாரத்தில் லண்டனில் தலைமறைவாக இருக்கும் விஜய் மல்லியாவின் ரூ.6000 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கத் துறை அதிரடி முடிவெடுத்துள்ளது.

நிதிதொடர்பான முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் இரண்டாவது சுற்று சொத்துப் பறிமுதல் நடவடிக்கையை அமலாக்கத் துறை எடுக்க முடிவெடுத்துள்ளது.

சட்டவிரோத நிதிநடவடிக்கை தொடர்பாக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தும் மல்லையா செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து அமலாக்க இயக்ககம் இந்த முடிவை எடுத்துள்ளது.

விரிவடையும் விசாரணை:

மல்லையா குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான சில உறுதிப் பங்குகள், இது தொடர்பான அசையும் மற்றும் அசையாச் சொத்துகளை பறிமுதல் செய்து முடக்குவது என்ற நடவடிக்கையை விசாரணையை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் அமலாக்கத்துறை செய்வதாக செய்தி ஏஜென்சிகள் தெரிவிக்கின்றன.

இதோடு மட்டுமல்லாமல் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் இத்தகைய நடவடிக்கையை அமலாக்க இயக்ககம் துரிதப்படுத்தும் வாய்ப்பு தெரிகிறது.

இது தொடர்பாக ஏற்கெனவே அமலாக்க பிரிவினர் வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களுக்கு எழுதி விவரங்களை கோரியுள்ளது.

இதோடு மல்லையாவை தேடப்படும் குற்றவாளி என்ற உத்தரவை கோர்ட்டிலிருந்து பெற்று அதனை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வரும் நடைமுறைகளிலும் அமலாக்க இயக்குனரகம் தீவிரம் காட்டி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பாக இதே முறைகேடு, மோசடி வழக்கு தொடர்பாக ரூ.1,411 கோடி ரூபாய் சொத்துகளை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்தது. இந்நிலையில் மேலும் ரூ.6,000 கோடி சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்க இயக்ககம் முடிவெடுத்துள்ளது.

இந்திய வங்கிகளில் கடன் பெற்று அதனை அயல்நாட்டு தொழில்களில் முதலீடு செய்வதாக திசைத் திருப்பி மோசடி செய்வது தற்போது பலவாறு அம்பலமாகி வருகிறது.

இந்நிலையில் மல்லையாவை இந்தியாவுக்குக் கொண்டு வர இந்தியா-பிரிட்டன் பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கையை செயல்படுத்த அமலாக்க இயக்ககம் வெளியுறவுத்துறை அமைச்சகத்தை நாடியுள்ளது.