வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு

0

வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு

சமுதாயத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய, திறன் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக, வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1989, விதி 8-ன்படி போக்குவரத்து வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்கள் குறைந்தபட்சம் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால், நாட்டில் உள்ள பெரும்பாலான வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் முறையான கல்வித்தகுதி பெறவில்லை என்ற போதிலும், எழுதப்படிக்கவும், திறன் பெற்றவர்களாகவும் உள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்து அமைச்சகம் சார்பில், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில், ஓட்டுனர்களுக்கான கல்வித்தகுதியை நீக்குமாறு ஹரியானா மாநில அரசு வலியுறுத்தியது. இதனை பரிசீலித்தபோது, ஓட்டுனர்களுக்கு அவர்கள் சார்ந்த துறையில், உரிய திறன் தேவையே தவிர, கல்வித்தகுதி என்பது தேவையற்றது என தெரிகிறது.

எனவே, ஓட்டுனர் உரிமத்திற்கான கல்வித்தகுதியை நீக்குவதன் மூலம், வேலைவாய்ப்பற்ற ஏராளமானோர் குறிப்பாக நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

பயணியர் மற்றும் சரக்குப்போக்குவரத்து துறையில் பற்றாக்குறையாக உள்ள சுமார் 22 லட்சம் ஓட்டுனர் பணி வாய்ப்புக்களை ஈடுகட்ட, இந்த முடிவு பேருதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

எனவே, 1989ஆம் ஆண்டு மத்திய மோட்டார் வாகன சட்ட விதி 8-க்கு திருத்தம் கொண்டு வர மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.