ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக ஒருவர் கைது

0

ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக ஒருவர் கைது

சென்னை, ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஒருவரை சென்னை வெளிப்பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட நபரும், அவரது கூட்டாளிகளும் 36 போலி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர்.  மற்ற நபர்களின் கே.ஒய்.சி. ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர்.   உண்மையான ரசீது அல்லது பொருள்கள் வழங்கல் இல்லாமல் ரூ. 250 கோடி மதிப்புக்கான விலைப்பட்டியல் தயாரித்து  வழங்கியிருப்பது  தெரிய வந்துள்ளது.  இது ரூ.35 கோடி வரி ஏய்ப்பு நோக்கம் கொண்டது என்பது தெளிவாக தெரிகிறது.  மேலும், பல உற்பத்தியாளர்களும், சேவை அளிப்பவர்களும் இதே அளவு தொகைக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ய  இது உதவி செய்துள்ளது.  விரிவான விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பல சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் 27.09.2019 அன்று ஆஜர்செய்யப்பட்டார்.  அவர் 09.10.2019 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.    மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை வெளிப்பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை ஆணையர் திரு ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.