ரூ.30.29 கோடி – புதிதாக 147 ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

0
67

ரூ.30.29 கோடி – புதிதாக 147 ‘108’ அவசரகால ஊர்திகளின் சேவை: முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

அவசரகால ஊர்திகளின் சேவைகளை மேம்படுத்தும் விதமாக ரூ.30.29 கோடி மதிப்பில் 147 அவசரகால ஊர்திகளின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘108’ அவசரகால ஊர்தி சேவை கடந்த 2008-ம் ஆண்டு செப்.15-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழக அரசு EMRI GHS என்ற தனியார் நிறுவனம் மூலம் ‘108’ அவசரகால சேவையை வழங்கி வருகிறது. பொதுமக்கள் அவசரகால மருத்துவ தேவைக்கு 108 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு 24×7 மணிநேரமும் இலவசமாக பயன்பெற்று வருகின்றனர்.

கடந்த 2021 மே 7 முதல் இந்தாண்டு ஜனவரி வரை இத்திட்டத்தில் 18 லட்சத்து 25,880 கருவுற்ற தாய்மார்கள், 12 லட்சத்து 18,014 சாலை விபத்துகளில் காயமுற்றோர், 42 லட்சத்து 14,687 இதர அவசர கால மருத்துவ தேவைகள் என இதுவரை 72 லட்சத்து 58,581 பேர் பயன்பெற்றுள்ளனர்.

இதுதவிர, 41 இருசக்கர அவசரகால ஊர்திகள் மூலம் 1 லட்சத்து 42,649 பயனாளிகளும், பச்சிளம் குழந்தைகளுக்கான சேவை மூலம் 82,098 பயனாளிகளும், பழங்குடியினர் பகுதிகளில் வசிக்கும் 3 லட்சத்து 69,573 பயனாளிகளும் பயனடைந்துள்ளனர். இலவச அமரர் ஊர்தி சேவை மூலம் 5 லட்சத்து 89,375 இறந்தோரது உடல்கள் இலவசமாக அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதும் 195 ஊர்திகள் இச்சேவையின் கீழ் இயக்கப்படுகின்றன. மேலும் ‘102’ இலவச தாய்சேய் நல ஊர்தி சேவையை 9 லட்சத்து 48,715 தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது 109 இலவச தாய்சேய் நல ஊர்திகள் இயங்கி வருகின்றன. இதன்தொடர்ச்சியாக ரூ. 29 கோடியே 15 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் செலவில் 143 ஊர்திகளின் சேவையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், தமிழக கேபிள் டிவி கம்யூனிகேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பில் மருத்துவ உபகரணங்களுடன் கூடிய 4 புதிய அவசர கால ஊர்திகளையும் முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த அரசு பொறுப்பேற்றது முதல் தற்போது வரை ரூ. 121.58 கோடி செலவில் 515 மருத்துவச் சேவைக்கான அவசரகால ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளன.

பணிநியமனம்: உணவு பாதுகாப்புத் துறையில் உணவு பகுப்பாய்வு கூடங்களில் காலியாகவுள்ள இளநிலை பகுப்பாய்வாளர் பணியிடத்துக்கு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு, 31 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் க.பொன்முடி, தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலர் நா. முருகானந்தம், சுகாதாரத் துறை செயலர் சுப்ரியா சாஹு, உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.