ரூ.22 கோடியில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் 2ஆம் தொகுப்பு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.11.2024) அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில், தமிழ்நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை களையும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி திட்டமான “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினை 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கி வைத்து, தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
ஆரோக்கியமான குழந்தைகளே, நாட்டின் வளமான எதிர்காலம் என்பதைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 7.05.2022 அன்று சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்கும் நோக்கத்துடன், பரந்துபட்ட அளவில் குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்ய இருக்கிறோம் என்றும், மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் ஒன்றும் ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது என்றும் அறிவித்தார்.
அந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் மற்றும் சுகாதாரத்துறை ஒன்றிணைந்து, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் கடுமையான மற்றும் மிதமான ஊட்டச்சத்துக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மருத்துவ உதவி தேவைப்படும் குழந்தைகள் மற்றும் ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகள் ஆகியோரைப் பிரித்தறிந்து, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டினை நீக்க ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ என்ற புதிய திட்டத்தை நீலகிரி மாவட்டம், தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை குழந்தைகள் மையத்தில் 21.5.2022 அன்று முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் மூலம் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்ட குழந்தைகளில் சுமார் 77.3% குழந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர் என்று குறிப்பிடத்தக்கது.
பிறந்தது முதல் ஆறு மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக வழங்கப்பட வேண்டும். ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களின் உடல்நலம் பேணினால் மட்டுமே, குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்த முடியும்.
எனவேதான், தற்போது 76,705 ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ள 0-6 மாத குழந்தைகளின் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்குவதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளின் நிலையை தொடர்ந்து கண்காணிக்கும் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டம் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் அரியலூர் மாவட்டம், வாரணவாசி குழந்தைகள் மையத்தில் “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்து, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட ஊட்டச்சத்து உணவுகள் பற்றிய கண்காட்சி அரங்கத்தினை பார்வையிட்டு, அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகளை சுவைத்துப் பார்த்தார்.
பின்னர், அங்கன்வாடி குழந்தைகளுக்கு மாப்பிள்னை சம்பா, தூயமல்லி, வரகு முறுக்குகள், கருப்புகவுனி மற்றும் தூயமல்லி அதிசரங்கள், திணை லட்டு ஆகிய ஊட்டச்சத்து மிகுந்த தின்பண்டங்களை வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். இப்பெட்டகமானது, நெய், பேரிச்சம்பழம், ஊட்டச்சத்து மாவு, இரும்புசத்து டானிக், பருத்தி துண்டு (Towel), பிளாஸ்டிக் பக்கெட் மற்றும் கப் ஆகிய பொருட்களை கொண்டது. ஊட்டச்சத்து பெட்டகங்களை பெற்றுக் கொண்ட தாய்மார்கள் முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.