ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

0
263

ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,ஜன.9–

வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேநேரத்தில் கரும்பு, பச்சரிசி, சர்க்கரை வழங்க தடையில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, உலர்ந்த திராட்சை, ஏலக்காய், 2 அடி நீளமுள்ள கரும்பு ஆகியவற்றுடன் ரூ.1,000 கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ரொக்கப்பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு நேற்று முன்தினம் முதல் பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரூ.1,000 ரொக்கமாக கொடுப்பதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த டேனியல் என்பவர் தாக்கல் செய்தள்ள மனுவில் கூறியிருந்ததாவது:-–

தமிழக அரசு, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வருமானம் உள்ளிட்ட எந்த ஒரு பாகுபாடின்றி, ரூ.1000-த்தை பொங்கல் பரிசாக வழங்குகிறது. ஏற்கனவே, கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை முடிக்காத நிலையிலும், அதற்கு மிகப்பெரிய நிதி தேவைப்படும் சூழ்நிலையிலும், இதுபோல பொதுமக்கள் அனைவருக்கும் ரொக்கப்பரிசு வழங்கினால், அது தேவையில்லாத நிதி சுமையை அரசுக்கு ஏற்படுத்தும்.

நலத்திட்டங்களை உருவாக்கி பொதுமக்களுக்கு மாநில அரசு வழங்கலாம். அதுகூட பொருளாதார நிலையின் அடிப்படையிலேயே உருவாக்க வேண்டும். அதற்காக அனைவருக்கும் ரூ.1,000 ரொக்கப்பரிசு வழங்குவது ஏற்க முடியாது. ரூ. 1,000 ரொக்கம் பரிசு வழங்க அரசின் ரூ.2 ஆயிரம் கோடி செலவாகும். இதன் மூலம் அரசின் பணம் வீணடிக்கப்படுகிறது. தமிழக அரசு நிதி நெருக்கடியில் உள்ளது. ரூ.1000 கொடுப்பதன் மூலம் நிதி நெருக்கடியை அதிகரிக்கும். இந்த தொகையை வைத்து அடிப்படை வசதிகளை மேம்படுத்தலாம். கஜா புயல் நிவாரண பணிகளை மேற்கொள்ளாமல், பரிசு வழங்குவதை ஏற்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பின்னர் நீதிபதிகள் கூறுகையில், உள்கட்டமைப்பு வசதிகள், சாலை, பள்ளிகள் வசதிகளை மேம்படுத்தலாம். அதை விட்டுவிட்டு, இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டியது ஏன்? கொள்கை முடிவு எடுக்காமல் செயல்படுத்துவது ஏன்? அனைவரும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனரா? வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரொக்கம் வழங்குவதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், பணக்காரர்கள், வசதி படைத்தவர்களும் ரூ.1000 வாங்கி பயன்பெறுகிறார்கள். அவர்களுக்கு இந்த தொகையை வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? இது அரசுப்பணம். கட்சி பணம் அல்ல. கட்சி பணத்தை எடுத்து செலவு செய்தால் கோர்ட் கேள்வி கேட்காது. ஆனால், அரசு பணத்தை செலவு செய்தால், நிச்சயம் கேள்வி கேட்போம்.

பொங்கல் பரிசாக வழங்கப்படும் ரூ.1000 அரசுப்பணம். புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல், பொங்கல் பரிசு வழங்க வேண்டியதன் அவசியம் என்ன? என கேள்வி எழுப்பி, வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கக்கூடாது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தான் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும், கரும்பு, பச்சரிசி, சர்க்கரை வழங்க தடையில்லை எனவும் நீதிபதிகள் கூறினர்.