ரஜினி சார் இப்போது கூட நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் சினிமாவை வாழ வைக்க முடியாது:இவன் தந்திரன் படவிழாவில் T.சிவா பேச்சு!

0

ரஜினி சார் இப்போது கூட நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் சினிமாவை வாழ வைக்க முடியாது:இவன் தந்திரன் படவிழாவில் T.சிவா பேச்சு!

கெளதம் கார்த்திக், ஷ்ரதா ஸ்ரீநாத், ஆர்ஜே பாலாஜி நடிப்பில் ஆர். கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் – இவன் தந்திரன். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இப்படத்துக்கு செல்வா எடிட்டிங் பணிகளை கவனிக்க இருக்கிறார். ஸ்டண்ட் சில்வா சண்டைக் காட்சிகளை இயக்க இருக்கிறார். ‘இவன் தந்திரன்’ படத்தை ஆர்.கண்ணன் தயாரித்து டைரக்டு செய்துள்ளார். இவன் தந்திரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடந்தது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்நடைபெற்றது. இயக்குநர் கே.பாக்யராஜ் முன்னிலையில் தயாரிப்பாளர் தாணு இசையை வெளியிட ஆர்யா பெற்றுக் கொண்டார்.

விழாவில் RJ.பாலாஜி பேசியதாவது:- தமிழ் சினிமாவில் பைரசி பற்றி நீண்டகாலம் விவாதித்து வருகிறோம். இதை ஒழிப்பது கடினம், விசிடி, டிவிடி மாறி தற்போது இணையத்துக்கு வந்துள்ளது. ஹாலிவுட் வரை இந்த பிரச்சனை உள்ளது. தமிழ்ராக்கர்ஸை ஒழித்தால் மட்டும் இது நிற்காது இன்னும் 10 பேர் இதே போல் வருவார்கள். இதற்கு மாற்றாக நமது படங்களை அமேசான் பிரைம் போன்ற வணிக இணையதளங்களுக்கு விற்று லாபமடையலாம். இவ்வாறு RJ.பாலாஜி பேசினார்.

விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் பேசியதாவது:- ‘‘நடிகர் முத்துராமனை விட அவரது மகன் கார்த்திக்கை அதிகம் பேர் விரும்பினார்கள். இப்போது கெளதம் கார்த்திக்கை விட அவரது மகன் கௌதம் கார்த்திக்கை நிறைய பேர் விரும்ப துவங்கியுள்ளனர். அவருக்கு ஒரு சகோதரன் என்ற முறையில் சொல்கிறேன்! இன்னும் மெனக்கெட்டால் நீங்கள் பெரிய இடத்திற்கு வருவீர்கள்! உங்களிடம் எல்லா தகுதிகளும் இருக்கின்றது’’. இவ்வாறு பாண்டிராஜ் பேசினார்.

விழாவில் கெளதம் கார்த்திக் பேசியதாவது:- நான் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. என்னை இதுவரை தாங்கி பிடித்திருப்பது மீடியாக்கள் தான். மீடியாவோட உதவியால் தான் இப்போது ரங்கூன் நல்லா போய்கிட்டிருக்கு. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் என்னால் சினிமாவை புரிந்து கொள்ள முடியவில்லை. யாரை நம்புறது, யாரை நம்பக்கூடாதுன்னு தெரியாது. யார்கிட்ட என்ன பேசுறது? எப்படி பேசுறதுன்னுகூட தெரியாது. எனக்கு அறிவுரை சொல்லவோ வழிநடத்தவோ யாரும் கிடையாது. இதை நான் சொல்லும்போது கண் கலங்குகிறது. இப்போது நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள். சினிமா புரிந்திருக்கிறது. வெற்றியும் கைகூடி வந்து கொண்டிருக்கிறது. அப்பா ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார் என்பார்கள், அப்படி ஒரு பெயர் எனக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக ஒரு நாள் கூட நான் படப்பிடிப்புக்கு லேட்டாக செல்வதில்லை. இவ்வாறு கவுதம் கார்த்திக் பேசினார்.

விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் டி.சிவா கலந்துகொண்டு பேசியதாவது:- “கெளதம் கார்த்திக் நன்றாக வரவேண்டும் என்று நினைக்கும் ஆட்களில் நானும் ஒருவன். ஏனென்றால் அவருடைய அப்பாவும் நானும் நெருங்கிய நண்பர்கள். இன்னும் பெரிய வெற்றிகளை அவர் அடைவார் என்று நிச்சயமாக சொல்வேன். அவரைப் போன்ற இளமையான நாயகன், தமிழ் சினிமாவில் தற்போது இல்லை.

தமிழ் சினிமாவின் ஜி.எஸ்.டி வரிக்காக கமல்ஹாசன் உட்பட பலரும் களத்தில் இறங்கி பேசினார்கள். ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதம் என்று கூறியுள்ளார்கள். கேட்டதற்கு இதாவது கிடைத்ததே என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

இன்னும் ஒரு மோசமான சூழ்நிலைக்கு தென்னிந்திய சினிமா சென்று கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போது நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன. சிறிய, நடுத்தர தயாரிப்பாளர்கள் படங்களை திரைக்கு கொண்டுவர முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். செலவுகள்  இரண்டு மடங்காக உயர்ந்துவிட்டது. படங்களை வியாபாரம் செய்ய முடியவில்லை. சரக்கு சேவை வரியான ஜி.எஸ்.டியும் தயாரிப்பாளர்களை நசுக்குகிறது. ஓரளவு இந்த வரி குறைக்கப்பட்டாலும் பயன் இல்லை. கிராம பகுதியில் டிக்கெட் கட்டண உயர்வால் பாதிப்பே ஏற்படும்.

சினிமா பொழுதுபோக்கு சாதனம் மட்டுமல்ல, சட்டம் ஒழுங்கு பாதுகாப்புக்கு முக்கிய காரணமாகவும் இருக்கிறது. 10 நாட்கள் திரையங்குகளை மூடினால் வன்முறைகள்தான் நடக்கும். சினிமா, மனிதர்களை நல்வழிப்படுத்துகிறது. காதல், நட்பு உள்ளிட்ட அனைத்தையும் சினிமா தருகிறது. அந்த சினிமா இப்போது நன்றாக இல்லை. வரி சுமைகளால் தவிக்கிறது.

6 மாதத்தில் படத்தின் விளம்பரத்துக்கான செலவும் 3 மடங்கு உயர்ந்துள்ளது. தயாரிப்பாளர்கள் அனைவருமே அனாதையான மனநிலையில் இருப்பது போன்று உணர்கிறோம். ஜி.எஸ்.டி பிரச்சினைக்காக சென்றால், மத்திய அரசு நம்மை கண்டு கொள்வதில்லை. கடுமையான போராட்டத்துக்கு இடையே தான் படங்கள் தயாரித்துக் கொண்டிருக்கிறோம்.

தணிக்கை குழு விதிமுறைகளும் கடுமையாகி விட்டன. தணிக்கைக்கு விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலை உள்ளது. தணிக்கை குழுவின் அதிகாரம் சென்னையில் இருந்து மும்பைக்கு சென்று விட்டது. பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்படி வற்புறுத்தியும் அரசுகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

இந்தத் தருணத்தில் உங்கள் அனைவரது சார்பிலும் ஒரு வேண்டுகோள். ஆண்டவனாலும் கூட காப்பாற்ற முடியாது என்ற நிலை வந்தபோது, நான் இருக்கேன் என்று வந்து ஒட்டுமொத்தமாக சரி செய்து கொடுத்தீர்கள். தற்போது தமிழ் சினிமா அனாதை போல் செத்துக் கொண்டிருக்கிறது.

ரஜினி சார்.. ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாத நிலைக்கு சினிமா சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் இறங்கி குரல் கொடுக்க வேண்டும். இப்போது கூட நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் சினிமாவை வாழ வைக்க முடியாது. நீங்கள் சொன்னால் அத்தனை பேரும் திரும்பிப் பார்ப்பார்கள். மத்திய அரசு திரும்பிப் பார்க்கும். மத்தியில் இருப்பவர்கள் உங்களுடைய வார்த்தையை கேட்பார்கள்.

இவ்வாறு தயாரிப்பாளர் டி.சிவா பேசினார்.

விழாவில் ஷ்ரதா ஸ்ரீநாத்  பேசியதாவது:- காற்று வெளியிடை படத்தின் மூலமாக நான் உங்களுக்கு அறிமுகமாகியிருந்தாலும், நான் ஹீரோயினாக அறிமுகமாகும் திரைப்படம் இவன் தந்திரன். ஆஷா என்ற ஸ்ட்ராங்கான கேரக்டர் கொடுத்ததற்காக இயக்குநர் கண்ணனுக்கு நன்றி. நான் என்ன செய்கிறேன் எனத் தெரியாமல் ஏதேதோ செய்துகொண்டிருந்தபோது எனக்குப் புரியவைத்த கௌதமுக்கு நன்றி. காற்று வெளியிடை படத்திலிருந்தே எனக்கு அறிவுரைகள் சொல்லிக்கொடுத்துவரும் ஆர்.ஜே.பாலாஜிக்கும் நன்றி என்று தனக்கு பக்கபலமாக இருந்தவர்களுக்கு நன்றி.

இவ்வாறு ஷ்ரதா ஸ்ரீநாத் பேசினார்.

விழாவில் இயக்குனர் கண்ணன் பேசியதாவது:- ‘எல்லா துறையிலும் கல்வியறிவு குறைவாக இருப்பவர்கள் கூட அதிகம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் எஞ்சினீயரிங் போன்ற உயர் படிப்புகள் படித்தவர்களுக்கு சொற்ப சம்பளமே கிடைக்கிறது’. உள்நாட்டில் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில்லை. படித்த இளைஞர்களுக்கு வெளி நாடுகளில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. இதுபோன்ற இளைஞர்களின் அனுபவங்களை வெளியுலகுக்குச் சொல்ல வேண்டும். அதனால்தான் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படத்தை உருவாக்க நினைத்தேன்.

மேலும் அவர் கௌதம் கார்த்திக் பற்றி பேசும்போது கூறுகையில், ‘‘தெலுங்கில் பிரின்ஸ் மகேஷ் பாபு என்றால் தமிழ் சினிமாவின் பிரின்ஸ் கௌதம் கார்த்திக். அவர் நடித்துள்ள ‘ரங்கூன்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘இவன் தந்திரன்’ படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும்’’ என்றார் இயக்குனர் கண்ணன்.

விழாவில் கலைப்புலி எஸ்.தாணு, கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், எம்.கே.ராம்பிரசாத் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.

இவன் தந்திரன் படத்தை தனஞ்செயன் வாங்கி வெளியிடுகிறார்.