யாழ்ப்பாணத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு

0

கொழும்பு:இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2012-ம் ஆண்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்துக்கு முதன் முறையாக சென்றார். அப்போது அவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ‘புயலை தாண்டினால் தென்றல்’ என்ற தலைப்பில் பேசினார். தன்னுடைய உரையாடலில் 1941-ம் ஆண்டு ராமேசுவரத்தில் 5-ம் வகுப்பில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரநாத் என்ற ஆசிரியரிடம் கணிதம் பயின்றேன் என்று நினைவு கூர்ந்தார்.

மேலும் இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும், அமைதி திரும்ப வேண்டும், அனைத்து மக்களும் ஒற்றுமையாக, சமாதானமாக, சரிசமமாக வாழ வேண்டும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்று அவர் பேசிய பேச்சு அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் உத்வேகத்தை ஏற்படுத்தியது. பின்னர் மாணவ-மாணவிகளிடையே கலாம் கலந்துரையாடினார்.

2015-ம் ஆண்டு கொழும்புக்கு அப்துல் கலாம் சென்றார். அதுவே அவருக்கு தன்னுடைய வாழ்நாளில் கடைசி வெளிநாடு பயணமாக அமைந்தது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்துல் கலாம் மறைந்தார். அவருடைய மறைவுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் ஆயிரக்கணக்கானோர் அனுதாபம் தெரிவித்து இருந்தனர். தற்போது இலங்கை வட மாகாணங்களில் அப்துல் கலாம் பெயரில் இளைஞர் சங்கங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நிலையில் இந்தியா-இலங்கை இடையே நட்புறவை வளர்க்கும் விதமாக இந்திய தூதரகம் சார்பில் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் அப்துல் கலாமின் மார்பளவு சிலை நிறுவப்பட்டது. இதனை இந்திய தூதர் ஒய்.கே.சின்கா, வட மாகாண முதல்-மந்திரி விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

இந்தியாவுக்கு வெளியே அப்துல் கலாமுக்கு முதன் முறையாக சிலை நிறுவப்பட்டது இலங்கையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.