மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

0

மோடியும், அமித்ஷாவும் கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள் – நடிகர் ரஜினிகாந்த்

அமித் ஷாவும் நரேந்திர மோடியும், கிருஷ்ணன் அர்ஜுனனை போன்றவர்கள். இதில் யார் கிருஷ்ணன் யார் அர்ஜுனன் என்பது நமக்குத் தெரியாது. இது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும். காஷ்மீர் விவகாரத்திற்காக அமித்ஷாவுக்கு வாழ்த்துகள் காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது என்று ரஜினிகாந்த் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்.

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.

நாடு முழுவதும் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொண்ட 330 பொது நிகழ்ச்சிகளின் விவரங்களை ‘லிசனிங், லேர்னிங் அண்ட் லீடிங்’ எனும் அந்த நூல் விவரிக்கிறது.

வெங்கையா நாயுடு 19 நாடுகளில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது நடந்த ராஜீய நிகழ்வுகள் குறித்த விவரங்களையும் அந்த நூல் கொண்டுள்ளது.

இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு சென்னை வந்தார்.

இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் பன்வரிலால் புரோகித், நடிகர் ரஜினிகாந்த், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “வெங்கையா நாயுடுவை எனக்கு 25 ஆண்டுகளாக தெரியும். ஹைதராபாத் நகரில் ஒரு நண்பர் மூலமாக முதன்முதலில் அவரைச் சந்தித்து பேசினேன். அதன் பின்னர் ஒருமுறை பெங்களூரில் 2 மணி நேரம் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்து. அப்போதுதான் எனக்கு ஒன்று புரிந்தது. அவர் தப்பித் தவறி அரசியல்வாதி ஆகிவிட்டார். அவர் ஓர் ஆன்மீகவாதி,” என்றார்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், “நாடாளுமன்றத்தில் நீங்கள் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆற்றிய உரை, அற்புதம். இப்போது அனைவருக்கும் அமித் ஷா யாரென்று தெரிந்திருக்கும். அதில் எனக்கு மகிழ்ச்சியே,” என்றார்.

பிரதமர் மோடியும், உள்துறை மந்திரி அமித்ஷாவும் கிருஷ்ணன், அர்ஜூனன் போன்றவர்கள். யார் கிருஷ்ணன், யார் அர்ஜூனன் என்பதை அவர்களே அறிவார்கள் என பாராட்டி பேசினார்.