மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதம்.. மினி பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

0
83

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதம்.. மினி பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் மினி பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டு வருவதால், மெட்ரோ ரயில் பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக கூடுதல் மினி பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் 210 சிறிய பேருந்துகளைக் கொண்டுள்ளதாகவும்,அதில் 66 சிறிய பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், பயணிகளின் பயன்பாடு குறைந்து, இழப்பு ஏற்பட்டதால் மீதமுள்ள 144 சிறிய பேருந்துகள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நிறுத்தப்பட்டுள்ள இச்சிறிய பேருந்துகளை சிறந்த முறையில் பயன்படுத்திட பிற பகுதிகளிலிருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இயக்கிட உத்தேசிக்கப்பட்டு, முதற்கட்டமாக 12 சிற்றுந்துகளின் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகள் இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று தலைமைச் செயலகத்தில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடவும், மக்களின் பயண நேரத்தை குறைத்து, பயணத்தை எளிமையாகவும், அதிநவீன வசதியாக அமைத்திடவும் சென்னை மெட்ரோ இரயில் திட்டத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் 2007-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டு, முதல்கட்ட திட்டத்தின் கட்டுமானப் பணிகளை அப்போதைய துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் 2009ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, தற்போது சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரப்பிரசாதம்.. சிற்றுந்து போக்குவரத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இவ்வாறு சென்னை பெருநகர மக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றுகின்ற வகையில், பொதுப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு நிறைவேற்றி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, சென்னையில் உள்ள பொதுப் போக்குவரத்துகளின் ஒருங்கிணைந்த இயக்கத்தினை (Multi Modal Integration) உறுதி செய்யும் வகையில், மெட்ரோ இரயில் பயணிகள் சிரமமின்றி, விரைவாக பயணம் மேற்கொள்ள. தனி வண்ணத்தில் 12 இணைப்பு சிற்றுந்துகள் வாயிலாக தினசரி 148 நடைகள் இயக்கப்படும்.

குறிப்பாக, ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மடிப்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு 2 சிற்றுந்துகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து போரூருக்கு 2 சிற்றுந்துகள், விமானநிலையம் மெட்ரோவில் இருந்து குன்றத்தூர், கோயம்பேடு மெட்ரோவில் இருந்து மதுரவாயில் ஏரிக்கரைக்கு 2 சிற்றுந்துகள் திருவெற்றியூர் பேருந்து நிலையத்தில் இருந்து மணலி என மொத்தம் 6 இடங்களில் இருந்து 12 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.

இதன் மூலம்,சென்னை மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை உயர்வதுடன், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு வருவாய் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று, மற்ற அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழக இணைப்புச் சிற்றுந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் / முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ்., இ.ஆ.ப., போக்குவரத்துத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.கே.கோபால், இ.ஆ.ப., மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.