மு.க.ஸ்டாலின் வியூகங்களால் கொங்கு மண்டலத்தை வாரி சுருட்டிய தி.மு.க.
கோவை: சட்டமன்ற தேர்தலோ, பாராளுமன்ற தேர்தலோ எந்த தேர்தல் வந்தாலும் அனைவரின் கவனமும் திரும்புவது கொங்கு மண்டலத்தின் மீது தான்.
இந்த மாவட்டங்களில் கிடைக்கும் வெற்றி பெரிய மாற்றத்தையே ஏற்படுத்தும். கடந்த 2011 மற்றும் 2016-ம் ஆண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு மிகவும் முக்கிய பங்கு வகித்தது கொங்கு மண்டலத்தில் பெற்ற வாக்குகள் தான். 2021-ம் ஆண்டில் அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக அமருவதற்கும் கொங்கு மண்டலமே காரணமாக இருந்தது.
இதனால் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் வெற்றி எளிதாக கிடைத்து விடும் என அ.தி.மு.க.வினர் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும், மு.க.ஸ்டாலின் அமைத்த வியூகங்கள் தவிடு பொடியாக்கியது.
சட்டமன்ற தேர்தலில் கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றி தி.மு.க.வுக்கு கிடைக்காததால் இந்த மண்டலத்தின் மீது அந்த கட்சி தனி கவனம் செலுத்த தொடங்கியது.
கொங்கு மண்டலத்தை எப்படியும் தி.மு.க.வின் கோட்டையாக மாற்ற வேண்டும் என்பதில் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருந்தார். அதற்கு ஏற்றவாறு பல்வேறு வியூகங்களை அவர் வகுக்க தொடங்கினார்.
ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத கோவை மாவட்டத்திற்கு செந்தில் பாலாஜியையும், ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே கிடைத்த சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேருவையும் பொறுப்பு அமைச்சர்களாக நியமித்தார். குறிப்பாக கோவை மாவட்டத்தின் மீது மு.க.ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்தினார்.
கோவை மாவட்டத்திற்கு ஏராளமான அரசு வளர்ச்சி திட்ட பணிகளை கொண்டு வந்து செயல்படுத்தினார். இதுமட்டுமல்லாமல் முதல்- அமைச்சராக பொறுப்பேற்ற 9 மாதங்களில் 3 முறை அவர் நேரடியாக கோவைக்கு வந்து மக்களை சந்தித்ததும், குறைகளை கேட்டதும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.
கோவைக்கு கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட வந்த அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கவச உடை அணிந்து கொண்டு, கொரோனா நோயாளிகளை சந்தித்து, அவர்களுக்கு தைரியம் ஊட்டினார். இதுவும் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டை பெற்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை கோவையில் நடத்தி தொழில்களை கவர்ந்தது, தொழில் முனைவோர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்தது.
மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட செந்தில் பாலாஜியும், தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கிறதா? என்பதை நேரடியாக ஆய்வு செய்தார்.
இதுதவிர மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு வார்டாகவும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 150 இடங்களில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடத்தினார். அதில் மக்கள் திரண்டு வந்து தங்கள் குறைகளை கோரிக்கைகளாக கொடுத்தனர். அதனை பெற்று கொண்டு உடனுக்குடன் நடவடிக்கையும் எடுத்தார்.
மு.க.ஸ்டாலினை கோவைக்கு அழைத்து வந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அமைச்சர் செந்தில் பாலாஜி நடத்தினார். அந்த விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என்று சொன்னாலும், அதனை மிகப்பெரிய அளவிலான மாநாடு மாதிரியே நடத்தி காட்டினார்.
அந்த விழாவில் மக்கள் கொடுத்த பல்வேறு கோரிக்கைகளுக்கு, மு.க.ஸ்டாலின் கைகளினாலேயே நலத்திட்ட உதவிகளையும் பெற்று கொடுத்தார். இது கோவை மாவட்ட மக்களுக்கு பெரும் சந்தோஷத்தை கொடுத்தது.
மக்கள் வளர்ச்சி திட்ட பணிகளை கவனித்து கொண்டே மறுபுறம் அடிக்கடி கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து கூட்டம் நடத்தி தி.மு.க. வெற்றி பெறுவதற்கு கட்சியினருக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.
மு.க.ஸ்டாலின் வியூகங்களும், கூட்டணி அமைத்த விதமுமே தி.மு.க.வுக்கு கோவையில் எப்போதும் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று கொடுத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் 96 வார்டுகளை தி.மு.க. கூட்டணி கைப்பற்றியுள்ளது. தி.மு.க. மட்டும் 73 இடங்களை கைப்பற்றி முதல் முறையாக மேயர் பதவியை அலங்கரிக்க உள்ளது.
மாநகராட்சி மட்டுமின்றி கருமத்தம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, கூடலூர் கவுண்டம்பாளையம் ஆகிய 7 நகராட்சிகளையும், தொண்டாமுத்தூர், தாளியூர், ஆலாந்துறை, வேடப்பட்டி உள்பட மாவட்டத்தில் உள்ள 31 பேரூராட்சிகளையும் தி.மு.க. தன்வசமாக்கியுள்ளது. ஒரு பேரூராட்சி மட்டுமே அ.தி.மு.கவுக்கு கிடைத்துள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டில் அ.தி.மு.க.வுக்கு வெறும் 3-ல் மட்டுமே வெற்றி கிடைத்துள்ளது. 99 வார்டிலும் அ.தி.மு.க தனித்து களம் கண்டும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறுகையில், கடந்த சட்டசபை தேர்தலிலேயே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டாததால் தே.மு.தி.க கூட்டணியில் இருந்து வெளியேறியது. உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக பா.ம.க. விலகிய நிலையில், திடீரென பா.ஜ.கவும் விலகி தனித்து களம் கண்டது.
இப்படி கூட்டணியில் இருந்து ஒவ்வொரு கட்சியாக விலகி தனித்து போட்டியிட்டது, தி.மு.க.வுக்கு சாதகமாகவும், அ.தி.மு.க.வுக்கு பாதகமாகவும் அமைந்து விட்டது.
கோவை மாநகராட்சியில் பல வார்டுகளில் தி.மு.க. வேட்பாளர்கள் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கும், அ.தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழப்பதற்கும் இது காரணமாகி விட்டது. மேலும் பொங்கல் தொகுப்பு பிரச்சினை, கூட்டுறவு கடன் தள்ளுபடி விவகாரத்தில் அ.தி.மு.க.வின் பிரசாரமும் மக்களிடம் எடுபடாமல் போனதும் ஒரு காரணம் என தெரிவித்தனர்.
சேலம் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றி உள்ளது. அங்கு அ.தி.மு.க. உறுதியாக வெற்றிபெறும் என கருதப்பட்ட வார்டுகளில் கூட தோல்வியை தழுவி இருக்கிறது.
மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளுமே தி.மு.க. வசம் சென்றுள்ளது. தாரமங்கலம், இடங்கணசாலை நகராட்சிகள் புதிதாக தரம் உயர்த்தப்பட்டு முதன்முறையாக தேர்தலை சந்தித்தன. இங்கு பா.ம.க.வால் அ.தி.மு.க. தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த 2 நகராட்சிகளிலுமே பா.ம.க.வும், சுயேட்சைகளும் அதிக வார்டுகளை கைப்பற்றியுள்ளன.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் உள்ள எடப்பாடி நகராட்சியில் இதுவரை காங்கிரசும், அ.தி.மு.க.வும் மாறி மாறி வெற்றிபெற்றுள்ளன. இந்த முறை முதன் முதலாக தி.மு.க. வென்றுள்ளது. இங்கு அதிகமான வார்டுகளை கைப்பற்றிய தி.மு.க. தனி மெஜாரிட்டியுடன் நகராட்சிக்குள் நுழைந்துள்ளது.
இதன்மூலம் எடப்பாடி தொகுதியிலும் அ.தி.மு.க. தேர்தல் பணியில் சுறுசுறுப்பை காட்டவில்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். இதேபோன்று மாவட்டத்தில் சட்டசபை தேர்தலின்போது அ.தி.மு.க. வெற்றிபெற்ற 10 தொகுதிகளில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகள் அ.தி.மு.க.விடம் இருந்து தி.மு.க. வசம் மாறியுள்ளன.
இதில் வனவாசி பேரூராட்சி மட்டுமே அ.தி.மு.க. வசம் கிடைத்துள்ளது. நாமக்கல் மாவட்டத்திலும் முன்னாள் அமைச்சர் தங்கமணியின் சொந்த கிராமம் அமைந்துள்ள பள்ளிப்பாளையம், அவரது தொகுதியான குமாரபாளையம் ஆகிய 2 நகராட்சிகளிலும் அ.தி.மு.க.வை மக்கள் புறக்கணித்துள்ளனர்.
குமாரபாளையத்தில் சுயேட்சைகளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை கூட அ.தி.மு.க.வுக்கு மக்கள் தரவில்லை. இதேபோன்று முன்பு அ.தி.மு.க.வின் கோட்டை என கருதப்பட்ட திருச்செங்கோடு, நாமக்கல்லிலுமே தி.மு.க. வெற்றிவாகை சூடியுள்ளது.
அதி.மு.க.வின் தோல்விக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்கள் மத்தியில் அதற்கான செல்வாக்கை அதிகப்படுத்தியிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.
தி.மு.க. கடந்த 6 மாதங்களாகவே உள்ளாட்சி தேர்தல் பணியை தொடங்கி தீவிரமாக செயல்பட்டு வந்தது. குறிப்பாக சேலம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர் கே.என்.நேருவை கட்சி மேலிடம் அறிவித்ததிலிருந்தே தேர்தல் களப்பணி தொடங்கியது. சேலம் மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்களோடு கே.என்.நேரு கலந்து பேசி பல்வேறு வியூகங்களை அமைத்தார். பின்பு அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கலந்து ஆலோசித்து செயல்பட்டதன் விளைவாகவே சேலம் மாவட்டத்தில் தி.மு.க. இமாலய வெற்றியை ருசித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகளில் தி.மு.க.,கூட்டணி வெற்றி பெற்று மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.
மேலும் மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளையும் தி.மு.க., கைப்பற்றியுள்ளது. 15 பேரூராட்சிகளில் 14 பேரூராட்சிகளை தன் வசமாக்கியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 3 சட்டமன்ற தொகுதி களில் தி.மு.க. வெற்றி பெற்றது. கொங்கு மண்டல பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க. தோல்வியடைந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 3இடங்களை கைப்பற்றியது அக்கட்சியினருக்கு சற்று ஆறுதலை அளித்தது.
இந்தநிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மு.க.ஸ்டாலின் வியூகம் அமைக்க தொட ங்கிய போது திருப்பூர் மாவட்டத்தையும் முழுமையாக கைப்பற்ற தேவையான வியூகங்களை அமைத்து கொடுத்தார்.
வார்டுகள் தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்த உத்தரவிட்டதையடுத்து அமைச்சர்கள் மாவட்டம் முழுவதும் வார்டுகள் தோறும் குறைதீர்க்கும் கூட்டங்களை நடத்தினர். பொதுமக்கள் அளித்த மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டனர். பின்னலாடை நகரமான திருப்பூரில் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைளை தீர்த்து வைக்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி நூல் விலை உயர்ந்த போது அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கூலி உயர்வு கோரி விசைத்தறியாளர்கள் கடந்த 1½ மாதமாக போராட்டம் நடத்தி வந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் விசைத்தறியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு கண்டனர்.
கூட்டணி கட்சியினர் தங்களது செல்வாக்கான தொகுதிகளை கேட்டனர். அதனையே ஒதுக்கி கொடுக்க மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த வார்டுகளில் கூட்டணி கட்சியினரும் வெற்றி பெற்றனர்.
ஈரோடு மாநகராட்சி, கோபிசெட்டிபாளையம், பவானி, சத்தியமங்கலம், புஞ்சைபுளியம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளையும், 37 பேரூராட்சிளையும் தி.மு.க. கைப்பற்றியுள்ளது.
குறிப்பாக கோபிசெட்டிபாளையம் நகராட்சி, பவானி நகராட்சிகள் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கியது. கோபிசெட்டிபாளையம் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் சொந்த தொகுதி ஆகும். இதேபோல் பவானி நகராட்சி முன்னாள் அமைச்சர் கருப்பணின் சொந்த தொகுதி ஆகும். இதனால் இந்த 2 இடங்களும் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டையாக விளங்கியது.
தொடர்ச்சியாக இந்த 2 நகராட்சிகளிலும் அ.தி.மு.க.வே வெற்றி பெற்று நகராட்சி தலைவர் பதவியை பிடித்தது. ஆனால் தற்போது திடீர் திருப்பமாக இந்த 2 இடங்களிலும் தி.மு.க. தனது முத்திரையை பதித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மு.க.ஸ்டாலின் நேரடி பார்வையில் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். பெரும்பாலான வேட்பாளர்கள் வார்டு மக்களுக்கு நன்கு அறிமுகமான நபர்களாக தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட்டனர். மேலும் அவர்கள் அரசின் சாதனைகள் பற்றி பொதுமக்களிடம் எடுத்து கூறி தீவிரமாக வாக்கு சேகரித்தனர். மேலும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து அவர்கள் தேவைகள் குறித்து தெரிந்து கொண்டு அதை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை நம்பியும் பலர் வெற்றி பெற்றுள்ளனர்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை பல வார்டுகளில் வேறு வார்டுகளில் உள்ள வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் கட்சியினர் ஒத்துழைப்பு இல்லை. மேலும் தலைவர்களின் பிரசாரமும் எடுபடவில்லை. அதோடு பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் அதிகளவில் ஓட்டுகளை பிரித்ததாலும் அ.தி.மு.க.விற்கு அதிக இடங்கள் கிடைக்கவில்லை.