முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை ஒருங்கிணைத்து புதிய சுற்றுலா திட்டத்தை உருவாக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 

0
40

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளை ஒருங்கிணைத்து புதிய சுற்றுலா திட்டத்தை உருவாக்க வேண்டும்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 

சென்னை, தென் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர்களின் மாநாடு, பெங்களூருவில் மத்திய சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் வட கிழக்கு பிராந்திய விவகாரங்கள் துறை அமைச்சர் திரு. ஜி. கிஷன் ரெட்டி தலைமையில் இன்று (29.1.2021) நடைபெற்றது.

இந்த மாநாட்டில், மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் மீன்வளம், பால்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அவர் தமது உரையில், பண்டைக் காலத்திலிருந்தே இந்தியா சுற்றுலாத்தலங்களை அதிகம் கொண்ட நாடாக திகழ்கிறது என்றார். அதே போன்று தமிழகமும், இயற்கை எழில் மிக்க மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், கோரமண்டல் கடற்கரை மற்றும் அரிய தாவரங்கள் விலங்கினங்களைக் கொண்ட வனப்பகுதிகளும் பெரும் அளவில் உள்ளன. இவை தவிர, வரலாற்று மற்றும் ஆன்மீக சிறப்புவாய்ந்த சுற்றுலாத் தலங்களும் ஏராளம் உள்ளன.

தமிழ்நாட்டில் கங்கைகொண்ட சோழபுரம், மாமல்லபுரம், செஞ்சிக்கோட்டை, வேலூர் கோட்டை, தஞ்சை அரண்மனை, துறைமுக நகரான பூம்புகார், திருச்சி மலைக்கோட்டை, திண்டுக்கல் மலைக்கோட்டை, மதுரை திருமலை நாயக்கர் மஹால் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க தலங்கள் தமிழகத்தில் ஏராளம் உள்ளன.

நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலைவாசஸ்தலங்களும் தமிழகத்தில் சர்வதேச சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடங்களாக உள்ளன. காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், கன்னியாகுமரி மதுரை, சிதம்பரம் போன்ற ஆன்மீக ஸ்தலங்களும் அதிகம் உள்ளன.

அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, மற்றும் பழமுதிர்ச்சோலை ஆகிய இடங்களை இணைத்து ஆன்மீக யாத்திரை சுற்றுலா திட்டம் ஒன்றை உருவாக்குமாறு அமைச்சர் திரு. எல். முருகன் வலியுறுத்தினார்.