‘முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் செயல்களையும் – திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்!’: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.10.2024) இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில், முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117-வது பிறந்த நாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு, செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இந்திய விடுதலைப் போருக்காக தன்னையே ஒப்படைத்துக்கொண்டு உழைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனார் அவர்களின் நினைவிடத்தில் இன்று நான் மரியாதை செலுத்தியிருக்கிறேன்.
இந்த நேரத்திலே பேரறிஞர் அண்ணா அவர்களும், தலைவர் கலைஞர் அவர்களும் தேவர் திருமகனார் அவர்களைப் பற்றி பெருமைப்படுத்தி குறிப்பிட்டுச் சொன்னதை நான் சொல்ல விரும்புகிறேன்.
“அன்றைய அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் ஒருமித்த இளவல் போன்று, கம்பீரமாகக் காட்சி அளித்தார் தேவர் திருமகன்” என்று பேரறிஞர் அண்ணா அவரைப் பாராட்டியிருக்கிறார்.
“வீரராக பிறந்தார்; வீரராக வாழ்ந்தார்; வீரராக மறைந்தார்; மறைவுக்குப் பிறகும் வீரராக போற்றப்படுகிறார்” என்று தலைவர் கலைஞர் அவர்கள் அவரைப் பற்றி புகழ்ந்து பேசியிருக்கிறார்.
அத்தகைய தியாகியை போற்றும் அரசாக, திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். பசும்பொன்தேவர் அவர்களை போற்றி கழக அரசு செய்திருக்கக்கூடிய பல்வேறு செயல்பாடுகளில் சிலவற்றை நான் உங்களிடத்தில் குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன்.
➢ மதுரை மாநகரில் மாபெரும் வெண்கலச் சிலை
➢ பசும்பொன் மண்ணில் நினைவில்லம்
➢ மேல்நீலிதநல்லூர் – கமுதி – உசிலம்பட்டி ஆகிய இடங்களில் மூன்று அரசு கலைக் கல்லூரிகள்.
“முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் செயல்களையும் – திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்!”: முதலமைச்சர் உறுதி!
➢ மதுரை ஆண்டாள்புரத்தில் “முத்துராமலிங்கத் தேவர் பாலம்” என்று பெயரிட்டோம்.
➢ காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் கல்வி அறக்கட்டளை.
➢ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர் மரபினருக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு ஒதுக்கீடு.
➢ கடந்த 2007-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவை மிக எழுச்சியோடு நாம் கொண்டாடியிருக்கிறோம்.
➢ அப்போது, திருமகனார் வாழ்ந்த இல்லம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. விழாவை அடையாளம் காட்டக்கூடிய வகையில் வளைவு அமைக்கப்பட்டிருக்கிறது. அணையா விளக்கும் நாம் அமைத்திருக்கிறோம். நூலகக் கட்டடம் – பால்குடங்கள் வைப்பதற்கு மண்டபம் – முளைப்பாரி மண்டபம் என்று பசும்பொன்தேவர் திருமகனாருக்குப் புகழ் சேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.
இப்போது பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 117-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு குருபூஜை நடத்தியிருக்கிறோம். பசும்பொன்னில் இருக்கும் அவரது நினைவிடத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பான முறையில் செய்திருக்கிறது.
நேற்று முன்தினம் கூட, பசும்பொன் திருமகனாரின் பிறந்தாள் விழாவின்போது ஏற்படுகின்ற கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காகவும், மழை – வெயிலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும் 1 கோடியே 55 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்ட தெய்வீகத் திருமகனார் உ.முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தை திறந்து வைத்திருக்கிறோம்.
இதுபோன்று பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் போற்றும் செயல்களையும் – திட்டங்களையும் தொடர்ந்து செய்வோம்! எனவே அவரது புகழ் வாழ்க! வாழ்க! என்று இந்த நேரத்தில் குறிப்பிட்டு கூறிக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.