முதல்வராக அல்ல… தந்தையாக!

0
55

முதல்வராக அல்ல… தந்தையாக!

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 (நேற்றைய தினம்), சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில், பெண்கள் மீது நிகழும் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும். இந்நிலையில், இந்த தினத்தை குறிப்பிட்டு, தற்போது தமிழகத்தில் அதிகமாக பதிவாகும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – அவற்றின் தொடர்ச்சியாக நிகழும் தற்கொலைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதில் அவர், “உடல் ரீதியாக, பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செய்யப்படும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக, பல சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களின் முன்னால் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டு, அவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வீடியோ வழியாக பேசியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ள பிற தகவல்கள்: “சமீபகாலமாக நாம் அதிகம் கேள்விப்படும் செய்தியொன்று, என்னை அதிகமான மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. அவை பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மற்றும் அதைத்தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளவது பற்றிய செய்திகள். இவற்றை கேள்விப்படும்போது, உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவமானமாக இருக்கிறது. அறத்தையும் பண்பாட்டையும் அதிகம் பேசும் ஒரு சமூகத்தில், கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் முன்னேறிய ஒரு நாட்டில், அறிவியலும் தொழில்நுட்பமும் வளர்ந்த இந்த காலகட்டத்தில் இப்படிப்பட்ட கேவலமான அருவருப்பான செயல்கள் நடக்கத்தான் செய்கிறது என்பது வெட்கித்தலைகுனிய வைக்கிறது. இதுபற்றி (பாலியல் வன்கொடுமை) பேசாமல் இருக்க முடியாது; இருக்கவும் கூடாது. ’விட்றாதீங்க ப்பா’ என இந்த பாதிப்புகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் கதறுவது என் மனதுக்குள்ளேயே ஒலிக்குது. விட்டுடமாட்டோம் பிள்ளைகளே.

பள்ளிகளில், கல்லூரிகளில், வேலை செய்யும் இடங்களில் பல பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவற்றில் ஒருசிலதான் வெளியே தெரியவருகிறது. மற்றதெல்லாம் அப்படியே மறைக்கப்படுகிறது. மனசாட்சியற்ற மனிதர்களால் நம் பெண் பிள்ளைகள் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வரை, நாம் நாகரீகத்தையும் பண்பாட்டையும் பற்றி பேசுவதில் எந்தப் பொருளும் இல்லை. சக உயிராக பெண்ணை பார்க்கும் எண்ணம் ஒவ்வொருவருக்கும் தோன்றாதவரை, இந்தக் குற்றங்களைத் தடுக்க முடியாது. உடல் ரீதியாக ஒரு பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செய்யப்படும் வெளிப்படையான பாலியல் சீண்டல்களுக்கு எதிராக நம்மிடையே பல சட்டங்கள் உள்ளன. அத்தகைய சட்டங்கள் முன்னால் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். அதற்கு, நான் இந்த இடத்தில் உறுதியளிக்கிறேன்.

இப்படியான பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகள், அதைப்பற்றி வெளிப்படையாக புகார் கொடுக்க முன்வர வேண்டும். பள்ளி ஆசிரியர்களிடம், தலைமை ஆசிரியர்களிடம், பெற்றோர்களிடம், சக அதிகாரிகளிடம், நிர்வாகங்களிடம் புகார் தரவேண்டும். அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க அவர்களும் தயங்கக்கூடாது. ‘புகாரை வாங்கினால், பள்ளிக்கூடத்துடைய பெயர் கெட்டுப்போகும்’ என்று பள்ளி நிர்வாகமோ, ‘தனது மகளுக்கு நடந்ததை வெளியில் சொன்னால் ஊரார் தப்பா பேசுவாங்களோ’ என்று பெற்றோரோ நினைக்கக்கூடாது. அப்படி செய்தால், அது உங்களுடைய பிள்ளைகளுடைய எதிர்காலத்துக்கு நீங்களே செய்யும் மாபெரும் துரோகம் ஆகிடும் என்பதை நீங்கள் அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்படுகிற பெண்கள், உளவியல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர்; உடல் வலியோடு உள்ளத்து வலியும் அவர்களுக்கு உருவாகிறது; அவமானம் அடைகிறார்கள்; அவர்கள் மதில் ஊக்கம் குறைகிறது; நம்பிக்கை தளர்ந்து போகிறது; சக மனிதர்கள் மேல் வெறுப்பு வளர்கிறது; ஆண்கள் மீது கோவம் அதிகமாகிறது; கல்வியிலோ வேலையிலோ கவனம் செலுத்த முடியாதவங்களா அவர்களெல்லாம் ஆகின்றனர். இப்படி அந்தப் பெண்ணுடைய எல்லா செயல்பாடுகளுமே அந்த ஒரு காரணத்தால் தடைபடுகிறது. இப்படியான சரிவுகளில் இருந்து பெண் குலத்தை காக்க வேண்டிய கடமை, நம் எல்லோருக்கும் உள்ளது.

இந்த விஷயத்தில், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயிற்சி, ஆசிரியர்களுக்கும் காவலர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசால் வெளியிடப்படும் எல்லா பாடபுத்தகத்திலும் 14417 என்ற மாணவர்கள் உதவி எண், வரும் கல்வியாண்டு முதல் அச்சிடப்பட்டு வெளியிடப்படும். 1098 என்ற குழந்தைகள் புகார் எண் குறித்தும் அதிகம் விழிப்புணர்வு செய்யப்படும், செய்யப்பட்டு வருகிறது.

ஆகவே அன்புக் குழந்தைகளே… உங்களை அன்போடும் பாதுகாப்போடும் வளர்க்கும் கடமை எங்களுக்கு உள்ளது. முதலமைச்சராக மட்டுமன்றி, தந்தையாகவும் இருந்து உங்களை காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அதனால் தயவுசெய்து, யாரும் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாமென உங்களையெல்லாம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். ஒரு பெண் குழந்தை தற்கொலை செய்கையில், அவர் இந்த சமூகம் மொத்தத்தையும் குற்றம்சாட்டிவிட்டு மறைந்து போகிறார் என்று பொருள். எப்போதும், வாழ்ந்துதான் போராடனும். வாழ்ந்துக் காட்டுவதன் மூலமாகத்தான் உங்களிடம் அத்துமீறிய நபர்களிடம் சட்டத்தின் முன் நிறுத்தி, தண்டனை பெற்று தரமுடியும். அதனால், யாரும் தற்கொலை செய்துக்கொள்ளவேண்டாமென, உங்கள் தந்தையாக – உங்கள் சகோதரனாக – உங்கள் வீட்டில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன். உங்களைப் பார்த்துக்க, நாங்க இருக்கோம், நான் இருக்கேன், அரசாங்கம் இருக்கு”.

இவ்வாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.