முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் அதானி குழும தலைவர் சந்திப்பு

0

முதலமைச்சர் ஜெயலலிதாவை அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி, மேலாண் இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோர் சந்தித்து பேசினர்.

சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டங்களை தமிழக அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2012-ல் முதல்வர் ஜெயலலிதாவால் சூரிய மின்சக்தி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் ஆண்டுக்கு 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை நிர்ணயிக்கப்பட்ட தொகையில் பெற்றுக் கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், கடந்த 2015 ஜூலை 4-ம் தேதி அதானி குழுமத்துடன் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ரூ.4,536 கோடியில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அதானி நிறுவனம் அமைக்கும் 5 சூரிய மின் திட்டங்களில் இருந்து 648 மெகாவாட் மின்சாரத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பெற்றுக் கொள்ளும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தற்போது இத்திட்டப் பணிகள் நடந்து வருகின்றன,

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரை அதானி குழும தலைவர் கவுதம் அதானி, மேலாண் இயக்குநர் ராஜேஷ் அதானி ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர். அப்போது எரிசக்தித்துறை அமைச்சர் பி.தங்கமணி, தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் பி.ராமமோகன ராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.