முதலமைச்சரை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு…

0

முதலமைச்சரை விமர்சிக்க ஸ்டாலினுக்கு எந்த அருகதையும் இல்லை : அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு…

டெல்லி நிதி ஆயோக் கூட்டத்திலும், பிரதமரை நேரில் சந்தித்து மனு கொடுத்தபோதும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தின் உரிமைக்காக ஓங்கி குரல் கொடுத்திருக்கிறார். அவரை பற்றி ஸ்டாலின் விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை. இது அவரது காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் கடுமையாக சாடியிருக்கிறார்.

இது குறித்து மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அவர்களின் அறிக்கை :-

முதலைமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி புதுடெல்லியில் நடைபெற்ற நிதிஅயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டின் தேவைகளை பற்றியும், உடனடியாக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவேண்டிய திட்டங்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டியதின் அவசியத்தை பற்றியும், விரிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

பாரதப் பிரதமர் தலைமையில் பல்வேறு மத்திய அமைச்சர்களும் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்குபெற்று உரையாற்றிய இந்த நிதி அயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதலாக உரையாற்றியுள்ளார்.

நிதி அயோக் கூட்டத்திற்கு முன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தமிழகத்தின் உடனடி தேவைகளை 29 தலைப்புகளில் தொகுத்து, கோரிக்கை மனு ஒன்றையும் தமிழ்நாடு முதலமைச்சர் அளித்திருக்கிறார். நிதி அயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரை, பாரதப் பிரதமரிடம் தமிர்நாடு முதலமைச்சர் அளித்த கோரிக்கைகளின் தொகுப்பு ஆகியவற்றையொல்லாம் தெரிந்து கொள்ளாமல் அவற்றில் எதையுமே படித்துப்பார்க்கவும் இன்றி மு.க.ஸ்டாலின் தனது கட்சிக்காரர்களின் அராஜகத்தை மூடி மறைக்கவும், தமிழக மக்களின் குறிப்பாக ஏழை, எளிய, பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களின் நலனுக்காக முதலமைச்சர் மேற்கொண்ட அரிய முயற்சிகளை மக்கள் பார்வையில் இருந்து அழிக்க முயற்சிக்கும் வண்ணம் வீண் அவதூறு பரப்பும் அறிக்கை ஒன்றினை தனது சிங்கப்பூர் பயணத்திற்கு முன் வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்க காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு என்பதே உண்மை.

தமிழ்நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும், விவசாய பெருமக்களுக்கு அறுவடைக்குப் பின் பதப்படுத்தி விற்பனை செய்யும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், ஆசியாவிலேயே பெரிய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தினை தமிழ்நாட்டில் நிறுவிடவும், சென்னையின் குடிநீர் தேவைக்காக பேரூரில் 400 ஆடுனு கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு தேவையான நிதியை வழங்க கோரியும், பொது விநியோகத் திட்டத்திற்காக மானிய விலையில் பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் திட்டத்தினை மீண்டும் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியும்,

பொது விநியோகத் திட்டத்திற்காக கொள்முதல் செய்யப்படும் பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய்க்கு சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், மீனவர்களுக்கு உதவும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் நிரந்தர கடற்படைத் தளம் அமைக்க வேண்டும், மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2ற்கான நிதி உதவியை வழங்க வேண்டும், சென்னையில் புதிய விமான நிலையம் அமைக்க வேண்டும், மாநிலங்களுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழ்நாட்டிற்கான பங்கு நிலுவையினை வழங்க வேண்டும்; ராமநாதபுரத்திலும், விருதுநகரிலும் மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன போன்ற மிக அத்தியாவசியமான தமிழகத்தின் தேவைகளை வலியுறுத்தி முதலமைச்சர் நிதி அயோக் கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என்ன தேவை என்பதை அறிந்து அதனை பாரதப் பிரதமர் அவர்களிடம் எடுத்து கூறுவதற்காகவே தனியே பாரதப் பிரதமர் அவர்களை சந்தித்து அவர்களிடம் தமிழ்நாட்டின் கோரிக்கையை தெளிவாக எடுத்துரைத்து அதற்கான 29 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய ஆவணம் ஒன்றினை முதலைமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அளித்திருக்கிறார். அவற்றில் கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம், காவேரி மற்றும் அதன் கிளை நதிகளை கங்கை நதியைப் போன்று சீரமைத்தல், காவேரி பாசன முறையை மேம்படுத்துதல், தமிழ்நாட்டில் நீர்நிலைகளை சீரமைத்தல்,

முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை, மேகதாதுவில் காவேரியின் குறுக்கே ஒருபோதும் அணை கட்டப்படக்கூடாது என்பதில் உறுதி, அணை பாதுகாப்பு மசோதா, மின்சார ஒழுங்குமுறை திருத்த மசோதா-2014, மோட்டார் வாகன திருத்த மசோதா-2017, சென்னை பசுமை விமான நிலையம், சென்னை மெட்ரோ ரயில் – கட்டம் 2, சேலத்தில் பாதுகாப்பு தளவாடங்களுக்கான தொழில் முனையம், உதான் திட்டம், பாதுகாப்புத்துறை நிலங்களை நில மாற்றம் செய்தல், பாரத் நெட் கட்டம் 2 கோருதல், 14வது நிதிக்குழு இழப்பீடு,

தமிழ்நாட்டிற்கான நிலுவை மானியங்கள் கோருதல், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தை விடுவித்தல், 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இடையேயான சரக்கு மற்றும் சேவை வரியில் தமிழ்நாட்டின் பங்கை விடுவித்தல், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீடு, இராமநாதபுரத்தில் ஒரு மருத்துவ கல்லூரி அமைத்தல், கடற்கரை நகரங்களில் புயல் பாதுகாப்பு, பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம், சென்னை மற்றும் இதர கடற்கரை மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகள், மீனவர்களுக்கான நிரந்தர புயல் பாதுகாப்பு பணிகள்,

நீரியல் வறட்சி, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு, விளை பொருட்களை பதப்படுத்துவதற்கான மேலாண்மை திட்டம் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளையும் மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களிடம் விளக்கிக் கூறியிருக்கிறார் முதலமைச்சர். இதன் விவரம் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் 15.6.2019 அன்றே கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் அவர்கள் புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், தரைவழிப் போக்குவரத்துதுறை அமைச்சர் மற்றும் நீர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆகியோர்களை சந்தித்து, தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட உதவுமாறு கேட்டுக்கொண்டார். குறிப்பாக கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டம், நடந்தாய் வாழி காவேரி சீரமைப்புத் திட்டம், காவிரி வடிநில புனரமைப்புத் திட்டம், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கும் திட்டம் போன்றவற்றினை விரைந்து செயல்படுத்த முதலமைச்சர் தனது சந்திப்புகளின்போது வலியுறுத்தி கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய பல்வேறு திட்டங்களுக்கான நிதி மற்றும் மானிய நிலுவை தொகைகளை உடனடியாக விடுவிக்கவும், தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கவும் முதலமைச்சர் மத்திய அமைச்சர்களிடம் வலியுறுத்தினார்.

இத்தனை கோரிக்கைகளையும், அவற்றில் உள்ள நியாயங்களையும், அவற்றின் அவசியத் தேவைகளையும் பிரதமரிடமும், மத்திய அமைச்சர்களிடம் முதலமைச்சர் வலியுறுத்திய காரணத்தால், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற ஆவண செய்வதாகவும் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உண்மைகளையெல்லாம் மூடி மறைத்து தனது தி.மு.க. கட்சியின் நிர்வாகிகள் நாகர்கோவிலில் நடத்திய அராஜகத்தையும், சட்டத்தை மீறிய செயல்களையும் மக்கள் பார்வையிலிருந்து மறைத்துவிடும் நோக்கத்திலும், சிங்கப்பூர் செல்லும் அவசரத்திலும் மாண்புமிகு முதலமைச்சரின் முயற்சிகளைப் பற்றிய முழு உண்மையையும் தெரிந்துகொள்ளாமல் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவதூறு பரப்பி அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டிக்கதக்கது.

மேலும், ஸ்டாலினால் பிரதமர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட ராகுல்காந்தி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டப்படும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காக 50 ஆண்டுகாலம் போராடி அன்மையில் அமைக்கப்பட்ட காவேரி மேலாண்மை ஆணையம் களைக்கப்படும் என்றும் பேசியதை இதுநாள்வரை கண்டுகொள்ளாமலும், கண்டிக்காமலும் இருக்கும் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்களுக்காக அயராது பாடுபடும் தமிழ்நாடு முதலமைச்சரை பற்றி பேசுவதற்கு அறுகதையில்லை.

ஸ்டாலின் அவர்கள் 5 ஆண்டு காலம் சென்னை மேயராகவும், உள்ளாட்சி துறை அமைச்சராக 5 ஆண்டு காலமும் இருந்தபோது நிறைவேற்ற முடியாத மக்களுக்கான திட்டங்களையெல்லாம் அம்மாவின் அரசு நிறைவேற்றி வருகிறது. இதையெல்லாம் பொறுக்கமுடியாத ஸ்டாலின் அவர்கள் அவ்வப்போது வேண்டுமென்றே ஏதாவது ஒரு குற்றச்சாட்டை அரசு மீது சுமத்தி வருகிறார்.

நிதி அயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஆற்றிய உரையையும், பிரதமரிடம் அளிக்கப்பட்ட கோரிக்கை ஆவணத்தையும், மு.க.ஸ்டாலின் சிங்கப்பூரிலிருந்து திரும்பி வந்ததும் நிதானமாக படித்துப்பார்த்து தெளிவு பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் டி.ஜெயக்குமார் விடுத்தள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.