தமிழக முதல்வராக ஜெயலலிதா மே 23-ல் பதவியேற்பு- பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு ஜெயலலிதா மரியாதை

0

சென்னை, நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் 134 இடங்களை வென்று அ.தி.மு.க. மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. 1984–ம் ஆண்டிற்கு பிறகு எந்த கட்சியும் தொடர்ந்து ஆட்சியை பிடித்ததில்லை என்ற நிலையை மாற்றி, ஆளுகின்ற அ.தி.மு.க.வே மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. எம்.ஜி.ஆரின் சாதனையை தற்போது ஜெயலலிதா சமன் செய்துள்ளார். இது அ.தி.மு.க.வினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க.வின் இந்த வெற்றியை இந்தியாவே உற்று நோக்குகிறது. அ.தி.மு.க.வின் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று 2–வது நாளாக தமிழகம் முழுவதும் நீடித்தது. மீண்டும் முதல்–அமைச்சராக ஜெயலலிதா 23–ந்தேதி பதவியேற்கும் நாளை அ.தி.மு.க.வினர் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.

periyar jj20052016-1

வாழ்த்து கோஷம்
சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்பு விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறும் நிலையில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று மாலை நடந்தது.

இதற்கு முன்பாக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த முதல்–அமைச்சர் திட்டமிட்டார்.

இதையொட்டி அண்ணா மேம்பாலம் கீழே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலை, அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலை மற்றும் எம்.ஜி.ஆர். சிலை மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தன. மீண்டும் முதல்–அமைச்சராக பதவியேற்க உள்ள ஜெயலலிதாவை காண ஏராளமான தொண்டர்களும், பொது மக்களும் அண்ணா சாலையில் திரண்டு இருந்தனர். சாலையின் இரு பக்கத்திலும் குவிந்திருந்த தொண்டர்கள் ‘புரட்சித்தலைவி வாழ்க’ என்று கோஷமிட்டப்படி இருந்தனர்.

anna jj20052016-2

உற்சாக வரவேற்பு
முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை வரவேற்று அ.தி.மு.க. கட்சி கொடிகளும், வாழ்த்து பேனர்களும் வைக்கப்பட்டு இருந்தது. ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் அ.தி.மு.க. கட்சி பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். ஆங்காங்கே பெண்கள் கூட்டமாக கூடியிருந்து முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

போயஸ் கார்டன் முதல் அண்ணா சாலை வரை எங்கு பார்த்தாலும் அ.தி.மு.க. தொண்டர்கள் குவிந்து இருந்து ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சில இடங்களில் மேளதாளத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சட்டசபை தேர்தலுக்கு பிறகு தொண்டர்களை முதல் முறையாக ஜெயலலிதா சந்தித்ததால் மிகவும் உற்சாகமாக காணப்பட்டார். தன்னை நோக்கி வாழ்த்து கோஷமிட்ட தொண்டர்களுக்கு இரு கை கூப்பி வணக்கம் செலுத்தியும், இரு விரல்களை காட்டியும் தன்னுடைய மகிழ்ச்சியை ஜெயலலிதா வெளிப்படுத்தினார்.

மரியாதை
முதல்–அமைச்சர் ஜெயலலிதா 1.55 மணிக்கு அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள பெரியார் சிலை கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த பெரியார் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கடற்கரை வழியாக 2.12 மணிக்கு அண்ணா சாலை வந்த முதல்–அமைச்சர் அண்ணா சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து 2.19 மணிக்கு அண்ணாசாலை எம்.ஜி.ஆர். சிலைக்கு வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புன்னகை
தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, பொன்னையன் ஆகியோருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. பொருளாளரும், அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், டெல்லி மேல் –சபை துணை சபாநாயகர் தம்பித்துரை, அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், மேயர் சைதை பி.துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.