“மின்னல் வேகம் என்பதை ‘மு.க.ஸ்டாலின் வேகம்’ என்று குறிப்பிடலாம்”: முதல்வரைப் பாராட்டிய எம்.எல்.ஏ ரோஜா!

0
70

“மின்னல் வேகம் என்பதை ‘மு.க.ஸ்டாலின் வேகம்’ என்று குறிப்பிடலாம்”: முதல்வரைப் பாராட்டிய எம்.எல்.ஏ ரோஜா!

ஆந்திர மாநில சட்டமன்ற உறுப்பினர் ரோஜா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்தார். அப்போது தனது தொகுதியில் உள்ள தமிழ்வழிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு 10000 தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக வழங்கி உதவி வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இவர் கோரிக்கை வைத்து விட்டு நகரி தொகுதிக்கு வந்து சேர்வதற்குள், புத்தகங்கள் வழங்குவது தொடர்பாக முதல்வரின் உத்தரவு அவருக்குக் கிடைத்துள்ளது. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ரோஜா எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்கள் தொகுதி மற்றும் சித்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழ் மொழிப் பாடத்திட்டத்திற்கான 10 ஆயிரம் புத்தகங்கள் இலவசமாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

நாங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நகரி வந்து சேர்வதற்குள், சித்தூர் மாவட்ட பள்ளிகளுக்கு ததிமழ் பாடநூல்கள் வழங்குவது தொடர்பான தமிழ்நாடு அரசின் உத்தரவு என்னுடைய அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துவிட்டது.

மின்னல் வேகம் என்பார்கள். ஆனால் அதை விட வேகமாக தங்கள் உத்தரவு எங்களுக்கு வந்து அடைந்ததைக் கண்டு நாங்கள் வியந்து போனோம். மின்னல் வேகம் என்பதை இனி ஸ்டாலின் வேகம் என்றே குறிப்பிடலாம். எங்கள் கோரிக்கைகளை ஏற்று சித்தூர் மாவட்டத்தில் வாழ்கின்ற தமிழ் குழந்தைகளுக்கு இலவசமாகப் புத்தத்தை வழங்கிய தங்களுக்கு ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பில் இதயம் கனிந்த நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.