மாமல்லபுரத்தில் உற்சாக வெள்ளம்பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங்வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு

0
The Prime Minister, Shri Narendra Modi and the President of the People’s Republic of China, Mr. Xi Jinping visiting the Shore Temple Monuments, in Mamallapuram, Tamil Nadu on October 11, 2019.

மாமல்லபுரத்தில் உற்சாக வெள்ளம்பிரதமர் மோடி-சீன அதிபர் ஜின்பிங்வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு சிற்பங்களை பார்த்து வியந்தனர்

சென்னை, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சீன அதிபர் ஜின்பிங் – இந்திய பிரதமர் மோடி ஆகியோரின் 2 நாள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னையை அடுத்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது.

இதற்காக பிரதமர் நரேந்திரமோடி நேற்று முற்பகல் 11.15 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வந்தார். அவரை விமான நிலையத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் ப.தனபால் மற்றும் அமைச்சர்கள், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இல.கணேசன், எச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன், கூட்டணி கட்சி தலைவர்களான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர்.

பின்னர், பிரதமர் நரேந்திரமோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தைக்கு சென்றார். அங்கிருந்து காரில் கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் நட்சத்திர ஓட்டலுக்கு சென்று தங்கினார்.

அவரை தொடர்ந்து, சீன தலைநகர் பீஜிங்கில் இருந்து ‘ஏர் சீனா’ இரண்டடுக்கு தனி விமானத்தில் நேற்று அதிகாலை புறப்பட்ட சீன அதிபர் ஜின்பிங் மதியம் 1.55 மணி அளவில் சென்னை வந்தடைந்தார். அவருடன் உயர்மட்ட குழுவினரும் வந்தனர்.

விமானத்தில் இருந்து மதியம் 2.10 மணிக்கு இறங்கிய சீன அதிபர் ஜின்பிங்குக்கு சிவப்பு கம்பளம் விரித்து பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், சபாநாயகர் ப.தனபால், தலைமைச் செயலாளர் சண்முகம், போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்டோர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

விமான நிலையத்தின் ஓடுபாதையையொட்டிய பகுதியில் 500 கலைஞர்கள் நடனமாடியும், இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தும் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளித்தனர். பரதநாட்டியம், மயிலாட்டம், கொம்பு வாத்திய இசை போன்றவை வரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பெற்றன.

கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தபடி சீன அதிபர் ஜின்பிங் காரில் ஏறுவதற்காக நடந்து வந்தார். அதன்பிறகு, கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு அவர் காரில் புறப்பட்டார். விமான நிலையத்திற்கு வெளியே 3,500 கலைஞர்கள் நடனமாடியும், மங்கள இசை இசைத்தும் பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர். கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்லும் வழியில் மீனம்பாக்கம், பரங்கிமலை, கிண்டி ஆகிய இடங்களில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.

சீன அதிபர் ஜின்பிங் பயணம் செய்த காரின் முன்புறமும், பின்புறமும் பாதுகாப்பு வாகனங்கள் சென்றன. பாதுகாப்பு கருதி அந்த பகுதியில் ஏற்கனவே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஓட்டலுக்கு வந்த சீன அதிபர் ஜின்பிங் தனக்கான அறையில் மதிய உணவு அருந்தினார்.

அதன்பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்த அவர், மாலை 4 மணிக்கு காரில் புறப்பட்டு மாமல்லபுரம் சென்றார்.

சர்தார் பட்டேல் சாலை, மத்திய கைலாஷ், பழைய மாமல்லபுரம், சோழிங்க நல்லூர், கலைஞர் கருணாநிதி சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக அவரது கார் மாமல்லபுரம் நோக்கி விரைந்தது. அவரது காருடன் பாதுகாப்பு வாகனங்களும் சென்றன.

வழிநெடுகிலும், மாமல்ல புரத்திலும் சாலையோரம் நின்ற பொதுமக்கள் இரு நாட்டு கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் காட்டி மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றனர்.

இதற்கிடையே, கோவளம் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பிரதமர் மோடியும் மாலை 4.20 மணிக்கு மாமல்லபுரத்துக்கு புறப்பட்டார். சரியாக மாலை 4.55 மணிக்கு அவர் மாமல்லபுரத்தில் உள்ள அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்து, ஜின்பிங்கை வரவேற்பதற்காக காத்திருந்தார்.

அப்போது மோடி, தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை- துண்டு அணிந்து இருந்தார். வேட்டி- சட்டையில் அவர் கம்பீரமாக காட்சி அளித்தார். முதல் முதலாக அவரை வேட்டி-சட்டையில் பார்த்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

மாலை 5 மணிக்கு சீன அதிபர் ஜின்பிங் அர்ஜூனன் தபசு பகுதிக்கு வந்தார். காரில் இருந்து இறங்கிய அவரை பிரதமர் மோடி கைகுலுக்கி வரவேற்றார். இருவரும் உரையாடியபடி மெதுவாக நடந்து சென்றனர். பல்லவர் கால கலை சிற்பங்கள் குறித்தும், அதன் சிறப்பு குறித்தும் பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு விளக்கினார். அதை கேட்ட ஜின்பிங், கல்லிலே கலைவண்ணம் கண்ட தமிழர்களின் சிற்பக்கலை திறமை குறித்து வியந்தார். அப்போது அர்ஜூனன் தபசு முன்பு நின்றபடி இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அர்ஜூனன் தபசு பகுதியை சுற்றிப்பார்த்த பிறகு இருவரும் அருகில் உள்ள வெண்ணை உருண்டை பாறை பகுதிக்கு சென்றனர். அப்போது, அந்த பாறையின் சிறப்பு குறித்து நரேந்திரமோடி விளக்கினார். அதை ஆச்சரியமாக கேட்ட ஜின்பிங், பாறை எப்படி உருண்டு விழாமல் இருக்கிறது? என்பதை குனிந்து பார்த்தார். பின்னர் மோடி- ஜின்பிங் இருவரும் கைகளை பிடித்து உயர்த்தியபடி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

மாலை 5.30 மணி அளவில், இருவரும் அங்கிருந்து காரில் புறப்பட்டு அருகில் உள்ள ஐந்து ரதம் பகுதிக்கு சென்றனர். அங்கு இருவரும் மெதுவாக நடந்தபடி, சிலைகளை பார்த்து ரசித்தனர். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட யானை சிலையை சீன அதிபர் ஜின்பிங் ஆச்சரியமாக பார்த்தார். இருவரும் நடந்து சென்று, அருகில் போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தனர். அப்போது, பிரதமர் மோடி இளநீர் கொண்டுவரச் செய்து, சீன அதிபர் ஜின்பிங்குக்கு வழங்கி உபசரித்தார். தானும் இளநீரை பருகினார். சிறிது நேரம் இருவரும் அங்கேயே அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.

சுமார் 15 நிமிடங்களுக்கு மேல் நடந்த இந்த உரையாடலின் போது, அதிகாரிகள் யாரும் அருகில் இல்லை. 2 மொழி பெயர்ப்பாளர்கள் மட்டுமே உடன் இருந்தனர்.

ஐந்து ரதம் பகுதியை சுற்றிப்பார்த்த பிறகு, மாலை 5.55 மணி அளவில் இருவரும் கடற்கரை கோவிலுக்கு காரில் புறப்பட்டு சென்றனர். 6 மணிக்கு இருவரும் கடற்கரை கோவிலை சென்று அடைந்தனர். அந்த நேரம் இருள் சூழத் தொடங்கியதால், மின் விளக்குகள் எரியவைக்கப்பட்டன. மின்னொளியில் கடற்கரை கோவில் பொன் நிறத்தில் ஜொலித்தது. இந்த ரம்மியமான சூழலில், பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கை அழைத்துச் சென்று கோவிலை சுற்றிக்காட்டினார். அப்போது அந்த கோவிலின் கலை நுணுக்கம் பற்றியும், பெருமை பற்றியும் ஒவ்வொன்றாக விளக்கினார்.

இருநாட்டு அதிகாரிகளும் அப்பகுதியில் வரிசையாக நின்றனர். சீன அதிகாரிகளை அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், இந்திய அதிகாரிகளை பிரதமர் நரேந்திரமோடியும் அறிமுகம் செய்து வைத்தனர். அப்போது, மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் உடன் இருந்தார்.

அதன்பின்னர், அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலாசேத்ரா குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை இருநாட்டு தலைவர்களும் கண்டு களித்தனர்.

பரதநாட்டியம், கதகளி என கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு ராமர் சேது பாலம் அமைக்கும் நாட்டிய நடனத்தை இருநாட்டு தலைவர்களும் வெகுவாக ரசித்தனர். கலை நிகழ்ச்சிகள் நிறைவடைந்ததும், நடனமாடிய கலைஞர்களுடன் ஜின்பிங், நரேந்திரமோடி ஆகிய இருவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இரவு 7.30 மணி அளவில் அங்கேயே சீன அதிபர் ஜின்பிங்குக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

விருந்து நிகழ்ச்சி முடிவடைந்ததும், சீன அதிபர் ஜின்பிங் அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஓட்டலுக்கு காரில் புறப்பட்டார். அவரை பிரதமர் மோடி வழியனுப்பி வைத்தார். அவர் சென்றதும், மோடியும் கோவளத்தில் தான் தங்கியுள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு புறப்பட்டுச் சென்றார்.

நேற்று அவர் பயணம் செய்த அனைத்து சாலைகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

ஜின்பிங் இன்று (சனிக் கிழமை) பிரதமர் மோடி தங்கி இருக்கும் கோவளத்தில் உள்ள தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு இருவரும் சந்தித்து பேசுகிறார்கள். இதில் பிரதமர் மோடியுடன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட 8 பேரும், ஜின்பிங்குடன் அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி வாங் இ உள்ளிட்ட 8 பேரும் பங்கேற்கிறார்கள்.

பேச்சுவார்த்தைக்கு பின்னர் இரு நாடுகளின் சார்பிலும் தனித்தனியாக அறிக்கைகள் வெளியிடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.