மாதாந்திர ஓய்வூதிய தொகை வழங்கும் திட்டம்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

0

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முதல்- அமைச்சர் பொறுப்பை தான் கவனிக்க வேண்டியிருந்ததால், தனது தொகுதி (ஆர்.கே. நகர்) மக்களிடம் குறைகளை கேட்டு பெறுவதற்காக, முதல்-அமைச்சர் தனி பிரிவு சிறப்பு அதிகாரி கணேஷ் கண்ணாவை அவர் நியமித்தார்.
இவர் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் தண்டையார்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார். இந்த மனுக்கள் உடனடியாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பார்வைக்கு எடுத்துச் செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
ஆர்.கே. நகர் தொகுதி மக்களிடம் பெறப்பட்ட மனுக்களின் பெரும்பாலானவை, ஓய்வூதிய தொகை கேட்டும், பட்டா கேட்டும் வரப்பெற்றவை ஆகும். எனவே அது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
அதன் அடிப்படையில், ஆர்.கே. நகர் தொகுதி மக்களுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை மற்றும் பட்டா பெறுவதற்கான உத்தரவுகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார்.