மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழாஇளையராஜா பங்கேற்பு

0

மறைந்த நடிகர் எம்.என்.நம்பியார் நூற்றாண்டு விழா இளையராஜா பங்கேற்பு

சென்னை, மறைந்த நடிகர் எம்.என்.நம்பியாரின் நூற்றாண்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நேற்று நடைபெற்றது. விழாவில், எம்.என்.நம்பியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்பட குறுந்தகடு (சி.டி.) வெளியிடப்பட்டது. இதனை, இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட முன்னாள் டி.ஜி.பி. கே.விஜயகுமார் பெற்றுக் கொண்டார். அதைத்தொடர்ந்து இருவரும் எம்.என்.நம்பியாருக்கு புகழாரம் செலுத்தி பேசினர்.

எம்.என்.நம்பியார் தீவிர அய்யப்ப பக்தராகவும், மகா குருசாமியாகவும் இருந்தார். எனவே, விழாவில் முன்னதாக பக்தி பாடகர் வீரமணி ராஜூவின் அய்யப்ப பாடல்கள் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவில், இளையராஜா பேசும்போது, “சபரிமலை யாத்திரையின் போது, எம்.என்.நம்பியார் தங்கி செல்லும் தேக்கடி அருகே உள்ள எனது பங்களா இப்போது வேத பாடசாலையாக மாறியிருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம். இன்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் அங்கு வந்து வேதம் கற்று செல்கின்றனர்” என்றார்.

விழாவில், பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், நடிகர்கள் சிவக்குமார், டெல்லி கணேஷ், ராஜேஷ், டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், பி.வாசு, எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன் பிரபாகரன் சக்கரபாணி, எம்.என்.நம்பியாரின் மகன் மோகன் நம்பியார் மற்றும் நம்பியாரின் பேரன்கள் சித்தார்த் சுகுமார் நம்பியார், பிரீதம் நம்பியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.