மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்: செப்.2 இல் பிட்டுத் திருவிழா

0

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்: செப்.2 இல் பிட்டுத் திருவிழா

மதுரையில் ஆவ ணி மூலத் திருவிழாவை முன்னிட்டு, இன்று இரவு அருள்மிகு சுந்தரேசுவரருக்கு பட்டாபி,ஷேகம் நடைபெறுகிறது. சனிக்கிழமை (செப்.2) மாலை பிட்டுத் திருவிழா நடைபெறுகிறது.

அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழாவானது சுவாமிக்குரியதாகும். அருள்மிகு சுந்தரேசுவரர் திருவிளையாடல்களை மையமாக வைத்து நடைபெறும் இத்திருவிழா, கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆறாம் திருநாளான புதன்கிழமை பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை நடைபெற்றது. ஏழாம் திருநாளான வியாழக்கிழமை காலை சுவாமி, அம்மன் தங்கப் பல்லக்கில் எழுந்தருள்கின்றனர்.

பின்னர், ஆவணி மூலவீதி, மேலமாசி வீதி வழியாக இன்மையில் நன்மை தருவார் கோயிலில் எழுந்தருள்கின்றனர். அங்கு, வளையல் விற்ற லீலை நடைபெறுகிறது. மாலையில், இன்மையில் நன்மை தருவார் திருக்கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடாகி, மேலமாசி வீதி, மேலக்கோபுரத் தெரு, தானப்ப முதலி அக்ரஹாரம், வடக்காவணி மூல வீதி வழியாக திருக்கோயிலில் எழுந்தருள்வர்.

திருக்கோயிலில் சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில், அருள்மிகு சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேக விழா மீன லக்னத்தில் மாலை 6.40 மணி முதல் இரவு 7.04 மணிக்குள் நடைபெறும். சுவாமியிடமிருந்து செங்கோலை திருக்கோயில் தக்கார் கருமுத்து தி. கண்ணன் பெற்று, சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரத்தை வலம் வந்து மீண்டும் செங்கோலை சுவாமியிடம் ஒப்படைப்பார்.

வெள்ளிக்கிழமை காலை, சுவாமி, அம்மன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி திருக்கோயில் வளாக செல்லப்பெருமாள் பிள்ளை மண்டபத்தில் எழுந்தருள்வர். அங்கிருந்து மாலை புறப்பாடாகி வடக்காடி வீதி பதினாறுகால் மண்டபத்தில் எழுந்தருளுவர். பின்னர், நரியைப் பரியாக்கிய லீலை நடைபெறும். இரவில், ஆவணி மூலவீதிகளில் சுவாமி, அம்மன் வலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.

சனிக்கிழமை பிட்டுத் திருவிழாவுக்காக காலையில் சுவாமி, அம்மன் திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி முக்கிய வீதிகள் வழியாக ஆரப்பாளையம் பிட்டுத் தோப்பு பகுதி வைகை ஆற்றோரம் உள்ள சேதுபதி மண்டபத்தில் எழுந்தருள்கின்றனர். பகலில், சுந்தரேசுவரர் வைகை ஆற்று வெள்ளத்தை முன்னிட்டு, தன் பக்தை வந்தியக் கிழவிக்காக பிட்டுக்கு மண் சுமந்த லீலையை சிவாச்சாரியார்கள் நிகழ்த்திக் காட்டுவர்.

இதில் பங்கேற்க திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி, திருவாதவூரிலிருந்து அருளாளர் மாணிக்கவாசகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் எழுந்தருள்வர். பிட்டுத் திருவிழாவுக்காக சுவாமி, அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு, பின்னர் மீண்டும் திருக்கோயிலில் எழுந்தருளும் வரை நடை சாத்தப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.